Halloween Costume ideas 2015
https://www.facebook.com/kalasemnet/

Articles | மறைந்தும் மறையாத மர்ஹூம் கேற்முதலியார் எம்.எஸ். காரியப்பர்

கிழக்கிலங்கை தமிழ் மற்றும் முஸ்லிம் இன உறவினை கட்டியெழுப்புவதில் பங்களிப்புச் செய்த மூத்த அரசியல் தலைவர்களில் ஒருவராக இன்றுவரை இரு சமூகத்தினராலும் மதிக்கப்படுகின்ற முஸ்லிம் அரசியல் தலைவராக மர்ஹூம் கேற்முதலியார் எம்.எஸ். காரியப்பர் காணப்படுகின்றார். தனது 88 வருட வாழ்க்கையில் சுமார் 70 வருட காலம் தமக்கு கிடைக்கப் பெற்ற வன்னியனார், கல்முனை பட்டின சபை தவிசாளர், பாராளுமன்ற உறுப்பினர் மற்றும் அமைச்சுப் பதவிகளை மக்களுக்காகவும் நாட்டின் நலனுக்காகவும் அர்ப்பணித்தவராவார்.

டாக்டர் இப்றாஹிம் காரியப்பர் மற்றும் லைலத்துல் கத்ரிய்யா காரியப்பர் தம்பதிகளின் மகனாக மஹ்மூத் சம்சுதீன் காரியப்பர் அம்பாறை மாவட்டத்தின் சாய்ந்தமருது எனும் கிராமத்தில் 1901ம் ஆண்டு மே மாதம் 27ம் திகதி பிறந்தார்.

தனது ஆரம்பக் கல்வியினை லீஸ் உயர்தரப் பாடசாலையிலும் அதன் பின்னர் கொழும்பு உவெஸ்லி கல்லூரியிலும் கற்றார். மருத்துவத் துறையில் தனது ஆர்வத்தை செலுத்தி கற்றுக் கொண்டிருந்த வேளையில் இவரது திறமையை கண்ணுற்ற ஆங்கில கவர்னர் 1921.01.01ம் அன்று பொத்துவில் பிரதேசத்திற்கான “மகாபிட்டி” வன்னிமை பதவியை இவரது 20வது வயதில் வழங்கினார். இப்பதவியின் மூலமாக அம்பாறை மாவட்ட முஸ்லிம்களின் வாழ்வியலில் பாரியதொரு மாற்றத்தினைக் கொண்டு வர முயன்றார். இவ்வாறாக  எம்.எஸ்.காரியப்பர் அவர்களின் வாழ்வியலையும் அவரது சேவைகளையும் அரச சேவை உத்தியோகத்தர் என்ற வகையிலும் அரசியல் தலைவர் என்ற வகையிலும் அடையாளப்படுத்தலாம்.

1921.01.01 பொத்துவில் வன்னிமை பதவியின் மூலம்  அரச சேவையில் இணைந்து கொண்ட எம்.எஸ்.காரியப்பர் 1946.07.01 ம் திகதி அரச சேவையிலிருந்து ஓய்வு பெறும் வரை அளப்பரிய சேவைகளை செய்துள்ளார்.

எம்.எஸ். காரியப்பர் 1927ல் சம்மாந்துறை நாடு காடுப்பற்று, 1932 கரைவாகு நிந்தவூர்ப்பற்று வன்னிமையாக பதவி வகித்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

இதன் பிற்பாடு இலங்கை அரசாங்கம் “வன்னிமை” நிருவாக முறைமையை பிரதேச இறைவரி உத்தியோகத்தர் (டீ.ஆர்.ஓ) முறைமையாக மாற்றியமைத்தமையினால் சுமார் 25 1/2 வருடங்களுக்குப் பின் 1946.07.01ம் திகதி வன்னிமை பதவியிலிருந்து ஓய்வு பெற்றார்.

பாணமைப்பற்று (பொத்துவில் மகாபிட்டி) வன்னிமையாக இருக்கின்ற சந்தர்ப்பத்தில் வறுமைக் கோட்டின் கீழ் வாழ்ந்த அம்மக்களுக்கு அரச நிலத்தில் ஒரு குடும்பத்திற்கு 5 ஏக்கர் வீதம் வழங்கி இதற்கான பாய்ச்சல் வடிச்சலையும் வழங்கினார்.

இதனால் பல்லாயிரக்களக்கான ஏக்கர் காட்டு நிலம் வயல் வெளியாக மாற்றம் பெற்றதைக் குறிப்பிடலாம். அத்துடன் விண்ணாங்கடி நிலப் பிரதேச அபிவிருத்தித் திட்டம், மஹா கண்டிய அபிவிருத்தித் திட்டம் என்பன அவரது முயற்சியின் பலனாகும்..

சம்மாந்துறைப்பற்று வன்னியார் காலப்பகுதியில் பளவெளி, பள்ளக்காடு, பொன்னம்வெளி, வெட்டாறு, விண்ணாங்கடிபாம், மலையடிவட்டை, புதுக்காடு, திராயோடை ஆகிய கண்டங்களில் உள்ள காணிகளை 5 ஏக்கர், 3 ஏக்கர் என எல்.டீ ஓ பேர்மிட் மூலம் வழங்கினார். மேலும் அரசினால் வீரமுனைக் கோயிலுக்கு வழங்கப்பட் 110 ஏக்கர் காணி, கல்லாறு பிள்ளையார் கோயிலுக்கு சொந்தமான 100 ஏக்கர் காணி என்பன பறிபோக இருந்த நிலையில் அதனைத் தடுத்து நிறுத்தினார்.

இவர் தமது வன்னிமை காலப்பகுதியில் கல்வி வளர்ச்சிக்காக பல பாடசாலைகள் தமது சொந்த காணிகளில் நிறுவினார். அதாவது 1928ல் சாய்ந்தமருதில்  ஜீ.எம்.எம்.எஸ். வித்தியாலயம், 1930ல் கல்முனையில் அல்- அஸ்ஹர் வித்தியாலயம், 1936ல் அஸ்ஸு ஹறா வித்தியாலயம் 1940களில் மருதமுனையில் அல்-ஹம்றா வித்தியாலயம், துறை நீலாவனையில் விஷ்னு வித்தியாலயம் ஆகிய பாடசாலைகளை நிறுவி கல்வி வளர்ச்சிக்கு பாரிய உதவிகளை வழங்கினார்.

எம்.எஸ்.காரியப்பர் அவர்களின் நேர்மை, அர்ப்பணிப்பு, தூரநோக்கு சிந்தனை போன்றவற்றை கௌரவிக்கும் வகையில் 1944ல் கேற் முதலியார் (இராசவாசல்) என்ற பட்டத்தை அப்போதைய கவர்னர் வழங்கினார். இலங்கை முஸ்லிம்களின் வரலாற்றில் இவ் அதி உயர் கௌரவத்தைப் பெற்ற முதல் முஸ்லிம் அவராவார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

எம்.எஸ். காரியப்பர் அரச சேவையிலிருந்து ஓய்வு பெற்றதும் டீ.எஸ். சேனநாயக்க, எஸ்.டப்ளிவ்.ஆர்.டி. பண்டாரநாயக்க, சேர் ஒலிவர் குணதிலக்க ஆகியோரின் வேண்டுகோளின் படி 1947ம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் கல்முனைத் தேர்தல் தொகுதியில் யூ.என்.பி. சார்பில் முதன் முதலாகப் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

இக்காலத்தில் உள்நாட்டு கிராமிய அபிவிருத்தி உதவி அமைச்சராக நியமிக்கப்பட்டார். தமது தூர நோக்கு சிந்தனை என்பவற்றின் மூலம் இப்பிராந்திய மக்களுக்கு பாரிய சேவைகளை செய்துள்ளார்.

அதனடிப்படையில் 1950களில் கல்லோயா அபிவிருத்தித திட்டம், பட்டிருப்புத் தொகுதியில் காணப்பட்ட மருதமுனைக் கிராமத்தை கல்முனைத் தொகுதியுடன் இணைத்தமை, சாய்ந்தமருது வைத்தியசாலை நிர்மாணிப்பு, கல்முனை பிரதான தபாலகம், மீன்பிடி அபிவிருத்தி என்பவற்றைக் குறிப்பிடலாம்.

அரசியல் அதிகாரத்தின் மூலமாக மேலும் பல பாடசாலைகளை நிறுவி இப்பிராந்தியம் கல்வி ரீதியாக வளர்ச்சி பெறுவதற்கான அத்திவாரத்தை இட்டமை குறிப்பிடத்தக்கதாகும். அந்த வகையில் கல்முனை ஸாகிறா கல்லூரி, அல்- பஹ்ரியா வித்தியாலயம், கமு, அல்-மிஸ்பாஹ் வித்தியாலயம் என்பனவும் சாய்ந்தமருதில் அல்-ஜலால் வித்தியாலயம், றியாலுல் ஜன்னாஹ் வித்தியாலயம், மல்ஹருஸ் ஸம்ஸ் ஆகிய பாடசாலைகளும் மருதமுனையில் அல்-மினன் பாடசாலை, அல்-மனார் ஆரம்ப பாடசாலை, பெரிய நீலாவனையில் புலவர்மணி ஆ.மு. ஷரிபுத்தின் வித்தியாலயம் என்பவற்றைக் குறிப்படலாம்.

1952களில் கல்முனை பட்டின சபைத் தலைவராக பணிபுரிந்தார். அதன் மூலம் கல்முனை பட்டினசபை கூட்ட மண்டபம் மற்றும் நகர மண்டபம் என்பனவும் கல்முனை மத்தியதர சந்தை,பட்டினசபை வருமானம் மூலம் வீடற்ற மக்களுக்கு வீடுகள் வழங்கியமை,2 மையவாடிகள் நிறுவியமை, கல்முனை வாழ் மக்களை மழைகாலத்திலிருந்து பாதுகாக்கும் விதத்தில் நடராசா வாய்க்கால் நிறுவியமை மற்றும் கல்முனை பட்டினத்துக்கு ஜெனரேட்டர் மூலம் மின்சாரம் வழங்கியமை என்பவற்றைக் குறிப்பிடலாம்.

முஸ்லிம்களுக்கென தனியானதொரு அரசியல் கட்சியின் அவசியம் தொடர்பாக தூரநோக்கு சிந்தனையுடன் செயற்பட்ட ஓர் அரசியல் தலைவராக  மர்ஹூம் கேற் முதலியார்  எம்.எஸ். காரியப்பர் அவர்களைக் குறிப்பிடலாம்.

அதனடிப்படையில் உதயசூரியன்  சின்னத்தில் “அகில இலங்கை இஸ்லாமிய ஐக்கிய முன்னனி” என்ற கட்சியினை ஆரம்பித்தார். 1960யில் நடைபெற்ற தேர்தலில் தனது கட்சி சார்பாக போட்டியிட்டு தோல்வியடைந்தார். அதன் பின்னர் 1965ல் நடைபெற்ற தேர்தலில் சுயேட்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்றார். எம்.எஸ்.காரியப்பர் 1968லிருந்து நோய்வாய்ப்படும் வரை தனது புத்திக்கூர்மையைப் பயன்படுத்தி மக்களுக்கு தன்னால் முடிந்தளவு பாரிய பல சேவைகளை வழங்கியுள்ளார்

மர்ஹூம் எம்.எஸ். காரியப்பர் அவர்கள் வன்னிமை, அமைச்சுப் பதவிக்கு புறம்பாக மேலும் பல பதவிகளை வகித்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

அந்தவகையில் 1921 ல் மரண விசாரணை அதிகாரி, 1923 ல் இலங்கை வனப்பகுதி பாதுகாப்பு சபை அங்கத்தவர், 1931ல் சமாதான நீதிவான், 1939 ல் உத்தியோக பற்றற்ற நீதிவான், 1940ல் மட்டக்களப்பு மாவட்ட கல்விக் குழு உறுப்பினர், 1942ல் கல்முனை கூட்டறவுச் சங்கத்தின் சம்மேளனத் தலைவர், 1944ல் மத்திய விவசாய சபையின் மட்டக்களப்பு மாவட்ட பிரதிநிதி என்பவற்றைக் குறிப்பிடலாம். இவ்வாறு மக்களுக்காகவே தன்னை அர்ப்பணித்த மர்ஹூம் கேற்முதலியார் எம்.எஸ். காரியப்பர் அவர்கள் தான் பிறந்த மாதம், அதே  திகதியில் அதாவது 1989 மே மாதம் 27ம் திகதி தனது 88வது வயதில் இறையடி சேர்ந்தமை குறிப்பிடத்தக்கதாகும்

இக்கட்டுரை 27 மே மாதம் 2016 இல் மர்ஹூம் கேற்முதலியார் எம்.எஸ்.காரியப்பர் அவர்களின் 27வது நினைவு தினத்தை முன்னிட்டு பிரசுரிக்கப்பட்டது.

தொகுப்பு :-    
எம்.வை.எம்.யூசுப் இம்றான்.
உதவி விரிவுரையாளர்
அரசியல் விஞ்ஞானத் துறை
இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகம்
       

Post a Comment

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget