இலங்கை,
சிம்பாப்பே, மேற்கிந்தியத் தீவுகள் அணிகள் பங்கேற்ற முத்தரப்பு ஒருநாள்
சர்வதேசப் போட்டித் தொடரின் சம்பியன்களாக இலங்கை அணி தெரிவாகியுள்ளது.
புலவாயோவில் இன்று ஞாயிற்றுக்கிழமை (27) இடம்பெற்ற இறுதிப் போட்டியில்,
சிம்பாப்வே அணியை ஆறு விக்கெட்டுகளினால் வென்றே இலங்கையணி
சம்பியனாகியுள்ளது.இப்போட்டியின் நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற சிம்பாப்வே அணியின் தலைவர் கிறேமி கிறீமர் தமது அணி முதலில் துடுப்பெடுத்தாடும் என அறிவித்தார். அதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய சிம்பாப்வே அணி, 36.3 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 160 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது.
துடுப்பாட்டத்தில் சிம்பாப்வே அணி சார்பாக அறிமுகத்தைக் மேற்கொண்ட தரிசாய் முசகண்டா 36(37), ஷோன் வில்லியம்ஸ் 35(54), கிரேய்க் எர்வின் 25(44) ஓட்டங்களைப் பெற்றனர். பந்துவீச்சில், இலங்கையணி சார்பாக, ஜெப்றி வன்டர்சே, அசேல குணரட்ன ஆகிய இருவரும் தலா மூன்று விக்கெட்டுகளையும் சச்சித் பத்திரண இரண்டு விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
பதிலுக்கு 161 ஓட்டங்கள் என்ற வெற்றியிலக்குடன் துடுப்பெடுத்தாடிய இலங்கையணி, 37.3 ஓவர்களில் நான்கு விக்கெட்டுகளையிழந்த நிலையில் வெற்றியிலக்கை அடைந்தது. துடுப்பாட்டத்தில், இலங்கை அணி சார்பாக குசல் மென்டிஸ் 57(72), அணித்தலைவர் உபுல் தரங்க ஆட்டமிழக்காமல் 57(98) ஓட்டங்களைப் பெற்றனர். பந்துவீச்சில், சிம்பாப்வே அணி சார்பாக பிரயான் விட்டோரி மூன்று விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
இறுதிப் போட்டியின் நாயகனாகவும், தொடரின் நாயகனாகவும் குசல் மென்டிஸ் தெரிவானார்.

Post a Comment