Halloween Costume ideas 2015
https://www.facebook.com/kalasemnet/

சாய்ந்தமருது வைத்தியசாலையை வேறு வைத்தியசாலைகளுடன் இணைப்பதை அனுமதிக்க முடியாது - சாய்ந்தமருது ஷூரா சபை

-இன்ஷாப்-
சாய்ந்தமருது மாவட்ட வைத்தியசாலையை வேறு எந்தவொரு வைத்தியசாலையுடனும் இணைப்பதற்கு அனுமதிப்பதில்லை என சாய்ந்தமருது ஷூரா சபை ஏகமனதாக தீர்மானித்துள்ளது.

சாய்ந்தமருது ஷூரா சபையின் நிறைவேற்றுக்குழுக் கூட்டம்
நேற்று (10) புதன்கிழமை அதன் தலைவர் டொக்டர் எம்.ஐ.எம்.ஜெமீல் தலைமையில் சபைச் செயலகத்தில் நடைபெற்றபோதே இத்தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சாய்ந்தமருது மாவட்ட வைத்தியசாலையை கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையுடன் இணைத்து அதனை எலும்பு முறிவு சிகிச்சைப் பிரிவாக மாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதார பிரதி அமைச்சர் பைசால் காசிம் கடந்த திங்கட்கிழமை அஷ்ரப் வைத்தியசாலையில் நடைபெற்ற நிகழ்வொன்றின்போது அறிவித்திருந்தார்.

இவ்விடயம் தொடர்பில் ஷூரா சபையின் நிறைவேற்றுக்குழுக் கூட்டத்தில் பல கோணங்களில் விரிவாக ஆராயப்பட்டே மேற்படி தீர்மானம் எடுக்கப்பட்டிருப்பதாக ஷூரா சபையின் செயலாளர் எம்.ஐ.எம்.சதாத் தெரிவித்தார்.

1950 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட சாய்ந்தமருது மாவட்ட வைத்தியசாலை காலத்திற்கு காலம் பரிணாம வளர்ச்சி பெற்று வந்திருக்கிறது. இது முழுக் கல்முனைப் பிராந்தியத்திற்கும் நிறைவான சுகாதார சேவைகளை வழங்கி வந்துள்ளது. எனினும் கடந்த 2000 ஆம் ஆண்டுக்குப் பின்னரே அது பின்னடைவுக்கு தள்ளப்பட்டிருக்கிறது என இக்கூட்டத்தில் சுட்டிக்காட்டப்பட்டது.

இந்நிலையில் அதனை தரமுயர்த்தி இப்பிரதேச மக்களுக்கு முன்னர் போன்று சேவையாற்றுவதற்கு ஏற்ற வகையில் அதன் வசதிகள் அதிகரிக்கப்பட வேண்டும். விசேட வைத்திய நிபுணர்கள் கொண்டு வரப்பட வேண்டும். அதற்கேற்ற நடவடிக்கைகளே எடுக்கப்பட வேண்டும் என அங்கு வலியுறுத்தப்பட்டது.

அவ்வாறில்லாமல் அந்த வைத்தியசாலையினதும் ஊரினதும் அடையாளத்தை முற்றாக இல்லாதொழித்து விட்டு வேறொரு வைத்தியசாலையின் கீழ் ஒரு பிரிவை மாத்திரம் கொண்டியங்குவதற்கு ஒருபோதும் இணங்க முடியாது எனவும், சாய்ந்தமருது வைத்தியசாலை நிரந்தரமாக இருக்கத்தக்கதாகவே எந்தவொரு விசேட பிரிவும் ஏற்படுத்தப்பட வேண்டும் எனவும் தீர்மானிக்கப்பட்டது.

நூற்றாண்டு காலமாக சாய்ந்தமருத்துக்கு இருந்து வந்த உள்ளூராட்சி சபையை பறிகொடுத்து விட்டு,தற்போது அப்படியொரு சபையை பெற்றுக்கொள்வதற்காக போராடுவதை போன்றதொரு நிலை இவ்வைத்தியசாலைக்கும் ஏற்பட இடமளிக்க முடியாது எனவும் சுட்டிக்காட்டப்பட்டது.

கிழக்கு மாகாண சபையின் கீழுள்ள இவ்வைத்தியசாலையின் அபிவிருத்தி கருதி, இதனை மத்திய அரசின் கீழ் கொண்டு வருவதற்கும் பிராந்தியத்திற்கு பொதுவான விசேட பிரிவொன்றை ஏற்படுத்துவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டால் மாத்திரமே ஆதரவளிப்பது எனவும் இக்கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.

இத்தீர்மானங்களை ஜனாதிபதி, பிரதமர், சுகாதார அமைச்ச்சர், சுகாதார பிரதி அமைச்சர், கிழக்கு மாகாண ஆளுநர், முதலமைச்சர் மற்றும் சமூக, பிரதேச அரசியல் தலைமைகளுக்கு அறிவிப்பது எனவும் தீர்மானிக்கப்பட்டதாக ஷூரா சபையின் செயலாளர் எம்.ஐ.எம்.சதாத் மேலும் தெரிவித்தார்.

Post a Comment

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget