Halloween Costume ideas 2015
https://www.facebook.com/kalasemnet/

ஜனவரியில் ராஜிநாமா செய்வேன்; அதற்குள் அனைத்து அதிகாரங்களையும் பயன்படுத்துவேன்: ஆளுநர் ஹிஸ்புல்லாஹ்!


( நமது நிருபர்கள்)

வாழைச்சேனை ஆதார வைத்தியசாலைக்கு பன்னிரெண்டு வைத்தியர்களை எதிர்வரும் ஏப்ரல் மாதம் 15ம் திகதிக்கு முன்னர் நியமிப்பதாக கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்..எம். ஹிஸ்புல்லாஹ் உறுதியளித்துள்ளார்.

வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையின் அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடல் வைத்தியசாலை கேட்போர் கூடத்தில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு உரையாற்றுகையில் இந்த உறுதியை வழங்கினார்.

அவர் அங்கு மேலும் கூறுகையில்;

கிழக்கு மாகாணத்திலுள்ள சகல மாகாண வைத்தியசாலைகளிலும் நிறைய குறைபாடுகள் காணப்படுகின்றன. ஆளணிப் பற்றாக்குறை மாத்திரமல்ல. பௌதீகப்பற்றாக்குறையும் காணப்படுகின்றது. இவற்றை நிவர்த்தி செய்யக்கூடிய பல முயற்சிகளை நான் மேற்கொண்டு வருகின்றேன்.

மாகாண சபையானது குறிப்பிட்ட நிதியும், குறிப்பிட்ட அதிகாரங்களையும் கொண்டது. அதிகமான நிதி, ஆளணிகளை மத்திய அரசு வைத்திருக்கின்றது. மத்திய அரசுடன் உறவைப்பேணி சம்பந்தப்பட்ட அமைச்சர்களுடன் பேசி முடியுமானளவு விரைவாக கிழக்கு மாகாணத்திலுள்ள சகல நிருவாக ரீதியான பிரச்சனைகள், இன ரீதியான முரண்பாடுகள், கல்வி, சுகாதாரம் என சகல துறைகளிலும் இருக்கின்ற பிரச்சனைகளையும் முடியுமான வரை தீர்த்து வைக்க வேண்டுமென்று செயற்பட்டு வருகின்றேன்.

எதிர்வரும் ஏப்ரல் மாதம் 15ம் திகதிக்கு முன்னர் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலைக்கு 12 வைத்தியர்களை நியமிப்பதற்கு சுகாதார அமைச்சு இணக்கம் தெரிவித்துள்ளது. அத்தோடு, மகப்பேற்று வைத்திய நிபுணர் இல்லாது காணப்படுகின்றது. இவற்றை நிவர்த்தி செய்ய ஓய்வு பெற்ற வைத்தியரை மீள நியமித்து அவருக்கான சம்பளத்தினை கிழக்கு மாகாண சபை வழங்க முடிவு செய்துள்ளது.

கிழக்கு மாகாண வைத்தியசாலைகள் மகப்பேற்று வைத்திய நிபுணர் இல்லாது காணப்படுகின்றன. கொழும்பு வைத்தியசாலைகளில் மேலதிகமான வைத்தியர்களை வைத்துள்ளனர். சுகாதார அமைச்சு தர முடியாதென்றால், கிழக்கு மாகாணம் மகப்பேற்று வைத்திய நிபுணர் இல்லாது இருக்க வேண்டுமென்று எதிர்பார்க்கின்றனர்.

அத்தோடு, கிழக்கு மாகாணம் கல்வியில் ஒன்பதாவது இடத்திலுள்ளது. என்னவென்று பார்த்தால், கணிதம், விஞ்ஞானம், தொழில்நுட்ப பாடங்களில் மாணவர்களின் சித்தி குறைவாகவே காணப்படுகின்றது. குறித்த பாடத்திற்கு ஆசிரியர் குறைவாகவே காணப்படுகின்றனர். இவற்றினை மத்திய அரசாங்கம் வழங்குவதில்லை.

எதிர்வரும் ஏப்ரல் 05ம் திகதிக்கு முன்னர் கிழக்கு மாகாணத்தில் ஆங்கிலம், விஞ்ஞானம், கணிதம், தொழில்நுட்பம் உட்பட்ட ஏனைய பாடங்களுக்கு மாகாணத்திலுள்ள உயர் தரம் படித்த தகுதியான மாணவர்களைக் கொண்டு நிரப்புவதற்கு தீர்மானம் எடுத்துள்ளோம்.

கிழக்கு மாகாணத்தில் ஐந்து வலயங்கள் ஆசிரியர் பற்றாக்குறையால் பின்தங்கிய நிலையில் காணப்படுகின்றன. இவற்றினை நிவர்த்தி செய்ய பல முனைப்புக்களை நான் மேற்கொண்டு வருகின்றேன்.

எதிர்வரும் ஜனவரி மாதம் 10ம் திகதி எனது பதவியை இராஜினாமாச்செய்வேன். அதற்குள் 13வது சரத்தின் கீழ் வழங்கியுள்ள அதிகாரங்கள் அனைத்தையும் நூறு வீதம் பயன்படுத்தி, பிரச்சனைகளைத் தீர்க்க வேண்டுமென்று எதிர்பார்க்கின்றேன்என்றார்.

வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் எப். மதன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில், கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் எஸ். அன்சார், கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் எஸ். அருள்குமரன், மட்டக்களப்பு மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் திருமதி கே. நவரெட்ணராஜா, ஓட்டமாவடி பிரதேச சபை பிரதித்தவிசாளர் யூ.எல். அஹமட் லெப்பை, வைத்தியசாலையின் அபிவிருத்திக்குழு உப தலைவர் எம்.எஸ். ஹாறுன், வாகரைப்பிரதேச சபை உறுப்பினர் எஸ்.எம். தாஹீர், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மாவட்ட அமைப்பாளர் எம்.முஸம்மில், வைத்தியசாலையின் பிரதான இலிகிதர் எம்.எச். பாறுக் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இதன் போது வைத்தியசாலைக்கு வருகை தந்த கிழக்கு மாகாண ஆளுநர், நோயாளர் விடுதிகளுக்குச் சென்று நோயாளிகளிடம் நலம் விசாரித்ததுடன், பழைய கட்டடங்கள் என்பவற்றைப் பார்வையிட்டார்.

அதன் பிற்பாடு ஆளுநருடன் வைத்தியசாலையின் அபிவிருத்திக்குழு மற்றும் வைத்தியசாலை உத்தியோகத்தர்களுமிடையில் இடம்பெற்ற வைத்தியசாலையின் அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடலின் போது, வைத்தியசாலையின் வைத்தியர்கள், தாதியர்கள், சிற்றூழியர்கள் உட்பட்ட ஆளணிப் பற்றாக்குறை, கட்டடப் பற்றாக்குறை, குடி தண்ணீர்ப் பிரச்சனைகள் உட்பட பல்வேறு பற்றாக்குறைகள் தொடர்பாக கருத்துக்கள் முன்வைக்கப்பட்டது.

இதற்கமைய எதிர்வரும் ஏப்ரல் மாதங்களிற்குள் வைத்தியசாலைக்குத் தேவையான பன்னிரண்டு வைத்தியர்கள், பத்து தாதியர்கள், பிரதேசத்தை அண்டியுள்ள 52 சிற்றூழியர்கள், இயந்திரங்கள், தண்ணீர் வசதிகள் போன்ற பிரச்சனைகள் தீர்த்துத்தரப்படும் என்று வாக்குறுதி வழங்கினார்.

மேலும், கிழக்கு மாகாண சபையின் நிதியொதுக்கீட்டின் மூலம் உள்ளக வீதிகள் அமைப்பதற்கு இரண்டு மில்லியன் ரூபாவும், பிணவறை திருத்துவதற்கு மூன்று மில்லியன் ரூபாவும், சிறுவர் பூங்கா அமைக்க ஐந்து மில்லியன் ரூபாவும், கதிர்வீச்சு இயந்திரம் உட்பட இயந்திரக் கொள்வனவுக்கு ஒன்பது மில்லியன் ரூபாவும், என்டர்ஸ்கோபி இயந்திரக் கொள்வனவுக்கு பத்து மில்லியன் ரூபாவும் ஒதுக்கீடு செய்வதாக கிழக்கு மாகாண ஆளுநர் வாக்குறுதியளித்தார்

Labels:

Post a Comment

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget