-அகமட் எஸ். முகைடீன்-
இப்பிரதேசத்தில் அபிவிருத்தி செய்ய
வேண்டியவற்றை அடையாளம் கண்டு அவற்றை முன்னுரிமை அடிப்படையில் தெரிவு
செய்து அபிவிருத்தி செய்ய வேண்டிய தேவை உள்ளது. அந்தவகையில் சாய்ந்தமருது
பிரதேசத்தில் அபிவிருத்தி செய்ய வேண்டிய வீதி மற்றும் வடிகான் தொடர்பில்
அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் கிராம சேவகர்கள் இணைந்து அடையாளம்
கண்டு அவற்றை எமக்கு தெரியப்படுத்துங்கள். பாடசாலைகளுக்கு தேவையான கற்றல்
உபகரணங்கள் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகள் தொடர்பான தேவைப்பாடு குறித்து
அதிபர்கள் எழுத்து மூலம் எமக்கு சமர்ப்பிக்கும் பட்சத்தில் முன்னுரிமை
அடிப்படையில் அவற்றை நிறைவேற்ற முடியும் என பிரதி அமைச்சர் எச்.எம்.எம்.
ஹரீஸ் தெரிவித்தார்.
சாய்ந்தமருதில்
இருந்த தேசிய இளைஞர் சேவைகள் மன்ற மாகாண காரியாலயத்தை இடம்மாற்றும்
நடவடிக்கை தொடர்பில் அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்க தவறியிருப்பின்
அபிவிருத்திக் குழு தலைவர் பதவியை தான் இராஜினாமா செய்யவிருந்தேன், இதனால்
கடந்த காலங்களில் அபிவிருத்தி குழு கூட்டங்களை நடத்தாமலிருந்தோம் என
விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் எச்.எம்.எம்.ஹரீஸ் தெரிவித்தார்.
சாய்ந்தமருது
பிரதேச அபிவிருத்தி தொடர்பான மீளாய்வுக் கூட்டம் ஸ்ரீலங்கா முஸ்லிம்
காங்கிரஸ் பிரதித் தலைவரும் விளையாட்டுத்துறை பிரதி அமைச்சரும் கல்முனைத்
தொகுதி அபிவிருத்திக் குழுத் தலைவருமான சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ்
தலைமையில் சாய்ந்தமருது பிரதேச செயலகத்தில் நேற்று (6) வியாழக்கிழமை
நடைபெற்றபோது அவர் உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
இதன்போது
சாய்ந்தமருது பிரதேச செயலாளர் ஐ.எம். ஹனீபா, உதவி பிரதேச செயலாளர் எம்.
றிகாஸ், உதவி திட்டமிடல் பணிப்பாளர் எம். ஜஃபர் உள்ளிட்ட திணைக்களங்களின்
தலைவர்கள் மற்றும் அதிகாரிகள், பாடசாலை அதிபர்கள், விளையாட்டுத்துறை பிரதி
அமைச்சரின் இணைப்புச் செயலாளர்களான நௌபர் ஏ. பாவா, கே.எம். தௌபீக், பிரதேச
செயலக உத்தியோகத்தர்கள், கிராம சேவகர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.
இங்கு
விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் ஹரீஸ் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,
சாய்ந்தமருதில் இருந்த தேசிய இளைஞர் சேவைகள் மன்ற மாகாண காரியாலயம்
எதர்ச்சையாக அம்பாறை நகரில் உள்ள ஒரு அரசியல்வாதியின் பின்புலத்தைக் கொண்டு
அந்நகருக்கு மாற்றுவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்றன. இதனை தடைசெய்யும்
வகையில் அதற்குப் பொறுப்பான இராஜாங்க அமைச்சர், அமைச்சின் செயலாளர்
எம்.ஐ.எம். ரபீக், தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் தவிசாளர் போன்றோரிடம்
குறித்த காரியாலயத்தை மாற்ற வேண்டாம் என்று பல முறை கேட்டுக்கொண்ட போதிலும்
அதற்கு சரியான முறையில் நடவடிக்கை மேற்கொள்ளப்படவில்லை.
இந்நிலையில்
குறித்த விடயம் தொடர்பாக அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்க தவறினால்
அபிவிருத்திக் குழு தலைவர் பதவியை தான் இராஜினாமா செய்யவிருப்பதாக தலைவர்
றவூப் ஹக்கீமுக்கு தெரிவித்திருந்தேன். அந்தவகையில் கடந்த சில காலமாக
அபிவிருத்திக் குழுக் கூட்டத்தை நடத்துவதில் ஆர்வமின்றி இருந்தேன்.
இக்காலப்பகுதியில் சாய்ந்தமருது பிரதேச செயலாளர் அபிவிருத்திக் கூட்டம்
நடத்துவது சம்பந்தமாக என்னிடம் கேட்டபோது இதனை அவரிடம்
தெளிவுபடுத்தியிருந்தேன்.
தேசிய இளைஞர்
சேவைகள் மன்றமானது பிரதமரின் அமைச்சின் கீழ் உள்ள ஒரு நிறுவனமாக
காணப்படுகிறது. பிரதமர் அதிகார பரவலாக்கம் தொடர்பாக, அதிலும் குறிப்பாக
வடக்கு கிழக்கு மாகாணங்களுக்குரிய அதிகாரங்களை வழங்குவது சம்பந்தமாக
பேசுகின்றபோது அவருடைய அமைச்சின் ஒரு சில அதிகாரிகள் அவருக்கே தெரியாமல்
எந்தவித காரணமும் இன்றி இவ்வாறான இடமாற்ற நடவடிக்கையினை எடுப்பதை ஒரு
போதும் ஏற்றுக் கொள்ள முடியாது.
எனவே இது
சம்பந்தமாக பிரதமருடனான தலைவர் றவூப் ஹக்கீமின் சீன விஜயத்தின்போது எனது
வேண்டுதலுக்கமைவாக இது தொடர்பில் அழுத்தமாக பேசியிருந்தார். அதற்கமைவாக
பிரதமர் நாட்டுக்கு வருகைதந்தவுடன் குறித்த இடமாற்றத்தை தடுத்து நிறுத்தி
இருந்தார். இருந்தபோதிலும் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு மீண்டும்
மாகாண பணிப்பாளர் இங்குள்ள கோப்புகள், ஆவணங்களை எடுத்துச் செல்ல
முற்பட்டிருந்தார். அச்சந்தர்ப்பத்தில் தலைவர் றவூப் ஹக்கீம்
பாராளுமன்றத்தில் இருந்தபோது அவருடன் தொலைபேசி ஊடாக இவ்விடயத்தின்
பாராதூரத்தை எடுத்துச் சொல்லி மீண்டும் அவர் பிரதமருடன் காரசாரமாக
கூறியதற்கு அமைவாக பிரதமர் அலுவலக அதிகாரி தொலைபேசி ஊடாக குறித்த மாகாண
பணிப்பாளரை தொடர்பு கொண்டு கோப்புகள், ஆவணங்களை எடுத்துச் செல்லும்
நடவடிக்கைக்கு தடை விதித்ததோடு குறித்த இடமாற்றத்தை செய்ய வேண்டாம் என
காரசாரமாக எச்சரிக்கையும் விடுக்கப்பட்டு இப்பிரச்சினை முடிவுக்கு
கொண்டுவரப்பட்டது.
இதனை ஊடகங்களுக்கு அடிக்கடி
வெளியிட்டு சிறு பிள்ளைத் தனமான அரசியல் செய்ய விரும்பவில்லை. இதனால்
அவ்விடயங்கள் ஊடகங்களில் வெளியிடப்படவில்லை. ஆனால் கடந்த காலங்களில்
அபிவிருத்திக் குழுக் கூட்டம் நடைபெறாமைக்கான காரணத்தை இங்கு தெளிவு படுத்த
வேண்டும் என்பதற்காகவே இதனை இங்கு கூற வேண்டிய நிர்ப்பந்த நிலைக்கு
ஆளானேன். சில விடயங்களில் கண்டிப்பாக இருக்கின்ற போதுதான் எங்களுடைய
விடயங்களை பாதுகாத்துக் கொள்ளவும், சாதிக்கவும் முடியும்.
சாய்ந்தமருது
பிரதேச கிராம சேவகர் பிரிவுகளில் மேற்கொள்ளப்படும் கிராமத்திற்கொரு
அபிவிருத்தி வேலைத்திட்டம் ஊடாக பல்வேறு அபிவிருத்தி வேலைத்திட்டங்கள்
முன்னெடுக்கப்படுகின்றன. அவ்வேலைத்திட்டங்களில் பெரும்பாலான வேலைகள்
முடிவடைந்த நிலையில் உள்ளன. பூர்த்தி செய்யப்படாத வேலைத்திட்டங்களை
விரைவுபடுத்துவதற்கான நடவடிக்கையினை உரிய அதிகாரிகள் எடுக்க வேண்டும்.
அத்தோடு
சுயதொழிலை ஊக்குவிக்கும் வகையில் வறுமைக் கோட்டிற்கு கீழ் வாழும்
மக்களுக்கு வாழ்வாதார உதவி வழங்கும் திட்டத்திற்கமைவாக தெரிவு செய்யப்பட்ட
பயனாளிகளுக்கு சுய தொழில் முயற்சியினை மேற்கொள்ளும் வகையில் வழங்கப்படவுள்ள
உபகரணங்களை மிகவிரைவில் கொள்முதல் செய்து அவற்றை வழங்குவதற்கான துரித
நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். மக்கள் பிரதிநிதி என்றவகையில் என்னை நாடி
உதவிகோரி வருகின்ற வறிய மக்களுக்கு என்னாலான உதவிகளை வழங்க வேண்டும் என்ற
எண்ணத்தில் செயற்படுகின்றேன். அந்தவகையில் மக்களின் கோரிக்கைகளை ஏற்று
இவ்வாறான வாழ்வாதார உதவிகளை அம்மக்களுக்கு வழங்க வேண்டி கடப்பாடு
எமக்குள்ளது.

Post a Comment