நபி(ஸல்)அவர்கள் ஏகத்துவக் கொள்கையை எடுத்துரைக்க ஆரம்பித்த சமயம், அண்ணல்
நபியவர்களும் அவர்களது கொள்கையை ஏற்றுக் கொண்டவர்களும் புனித கஃஅபாவில்
நுழைவதற்கும் அங்கு தொழுவதற்கும் தடை விதிக்கப்பட்டனர். அதை மீறிச்
செல்பவர்கள் தாக்கப்பட்டனர். குறைஷிகளின் இப்படிப்பட்ட அட்டூழியங்கள்
ஹிஜ்ரி 6 - ம் ஆண்டு வரை தொடர்ந்துக் கொண்டிருந்தது. அதன் உச்சக்கட்டமாக,
உம்ரா செய்வதற்காக வந்த மக்கா மண்ணின் மைந்தரான நபி(ஸல்)அவர்களும்
அவர்களின் தோழர்களும் தடுத்து நிறுத்தப்பட்டனர். எந்த வகையிலும்
முஸ்லிம்களை மக்காவினுள்ளே அனுமதிக்க மக்கத்து காஃபிர்கள் தயாராக
இருக்கவில்லை. இதன் விளைவாக இந்நிகழ்ச்சியின் இறுதியில், இறைவனின்
உதவியினாலும் இறைத்தூதர்(ஸல்) அவர்களது நுண்ணறிவு மிக்க நடத்தையினாலும்
ஏற்பட்ட ஓர் உடன்படிக்கை தான் இஸ்லாமிய வரலாற்றில் 'ஹுதைபிய்யா உடன்படிக்கை'
என்று அழைக்கப்படுகின்றது. அந்த நிகழ்ச்சி நடந்தது, 'துல்கஃதா' மாதத்தில்தான்.
இது வரலாற்று சிறப்புமிக்க ஒரு நிகழ்வு என்பதாலும் அதைப்பற்றி
தெரியாதவர்களும் தெரிந்துக் கொள்வதற்காகவும் இதைப் பதிவிடுவது பொருத்தமாக அமையும் இன்ஷா
அல்லாஹ்!ஹிஜ்ரி 6 - ம் ஆண்டில் நபி (ஸல்) அவர்கள் உம்ரா செய்வதற்காக மக்காவை நோக்கி வரும்போது அவர்களுடன் சுமார் 1500 தோழர்கள் இருந்தனர்.
"ஹுதைபிய்யா தினத்தன்று நபி (ஸல்) அவர்களிடம் உறுதிப் பிரமாணம் செய்து கொடுத்தவர்கள் ஆயிரத்து ஐநூறு பேர் இருந்தனர்" என்று ஜாபிர் அவர்கள் எனக்கு அறிவித்தார்கள்.
அறிவிப்பவர்: கத்தாஹ்(ரலி); நூல்:புகாரி (இன்னொரு அறிவிப்பில் 1400 பேர் என்றும் கூறப்பட்டுள்ளது)
மக்கத்து நிராகரிப்பாளர்கள் முஸ்லிம்கள் வருவதைக் கேள்வியுற்று, அவர்களை மக்காவினுள்ளே உம்ரா செய்ய அனுமதிப்பது என்பது தாங்கள் அதுவரை செய்துவந்த போராட்டத்தில் தாங்கள் தோல்வியை தழுவியதாகிவிடும், முஹம்மது(ஸல்)அவர்கள் தம் பலத்தால் மக்காவினுள் நுழைந்துவிட்டார் என்று மக்கள் பேசிக் கொள்வார்கள் என்று எண்ணி, இதனைத் தடுக்க தங்களால் இயன்ற அனைத்து முயற்சிகளிலும் இறங்குகிறார்கள்.
நபி(ஸல்)அவர்கள் இஹ்ராம் அணிந்து உம்ராவுக்குச் சென்று கொண்டிருந்த போது, உம்ராச் செய்யவிடாமல் தடுப்பதற்காகக் குறைஷிகள் படை திரட்டியுள்ளதாக நபி(ஸல்)அவர்கள் ஏற்படுத்தியிருந்த உளவுத் துறை மூலமாக செய்தி கிடைக்கின்றது. புகாரி கிரந்தத்தில் இதுபற்றி மிஸ்வர் பின் மக்ரமா(ரலி)அவர்கள் அறிவிக்கக்கூடிய 4179 வது ஹதீஸின் தொடர்ச்சியில்,
நபி(ஸல்)அவர்கள் அனுப்பி வைத்த உளவாளி வந்து கூறிய செய்தியை அறிந்தவுடன் நபி(ஸல்)அவர்கள் கூறினார்கள், "மக்களே! இறையில்லத்திற்குச் செல்ல விடாமல் நம்மைத் தடுக்க நினைக்கும் இவர்களின் குடும்பத்தாரிடமும் சந்ததிகளிடமும் நான்(போர் தொடுக்கச்)செல்ல வேண்டுமென நீங்கள் கருதுகிறீர்களா? நம்மிடம் அவர்கள்(போர் புரிய)வந்தால், (அதற்கு நாம் பொறுப்பல்ல. நாம் அனுப்பி வைத்த) உளவாளியை(யும்) அந்த இணை வைப்பாளர்களுக்குத் தெரியாமல் அல்லாஹ் ஆக்கிவிட்டான். அவ்வாறு அவர்கள் வராவிட்டால் அவர்களை நாம் இழப்புக்குள்ளாக்கிவிட்டுச் செல்வோம்" என்று கூறினார்கள்.
அப்போது அபூபக்கர்(ரலி) அவர்கள், "அல்லாஹ்வின் தூதரே! இந்த இறையில்லத்தை நாடிதானே நீங்கள் புறப்பட்டு வந்தீர்கள். யாரையும் கொல்லவோ எவரிடத்திலும் போரிடவோ நீங்கள் வரவில்லையே! எனவே, இறையில்லத்தை நோக்கிச் செல்லுங்கள். இறையில்லத்திற்குச் செல்லவிடாமல் நம்மை எவன் தடுக்கின்றானோ அவனிடம் நாம் போரிடுவோம்" என்று (ஆலோசனை) கூறினார்கள். பிறகு நபி(ஸல்)அவர்கள், "அல்லாஹ்வின் பெயரால் பயணத்தைத் தொடருங்கள்" என்று கூறினார்கள்.
இதனிடையே நபி(ஸல்)அவர்கள் தாங்கள் உம்ரா செய்வதற்காகதான் மக்காவிற்கு வருகிறோம் என்பதை விளக்கிச் சொல்லும்படியும், அமைதியாக உம்ரா செய்து விட்டுத் திரும்புவதாக பேச்சு வார்த்தை நடத்திவிட்டு வரும்படியும் உஸ்மான்(ரலி)அவர்களை அனுப்பி வைக்கின்றார்கள்.
அதற்கு முன்பு...
நபி(ஸல்)அவர்கள் குஸாஆ கிளையினரைச் சார்ந்த கிராஷ் பின் உமைய்யாவை ஸஃலப் என்ற ஒட்டகத்தின் மீது அமர்த்தி முதலில் அனுப்பி வைத்திருந்தார்கள். அவர் மக்காவிற்குள் நுழைந்ததுமே குறைஷிகள் அவரது ஒட்டகத்தை அறுத்து அவரைக் கொலை செய்யவும் நினைத்தனர். ஆனால் பனூ கினானா கிளையைச் சேர்ந்தவர்கள் அதைச் செய்யவிடாமல் குறைஷிகளைத் தடுத்துவிட்டனர். (குறைஷிகளிடமிருந்து தப்பித்த) கிராஷ், நபி(ஸல்)அவர்களிடம் வந்தார்.
இதனால் உமர்(ரலி)அவர்களை அனுப்பி வைப்பதற்காக நபி(ஸல்)அவர்கள் அழைத்தார்கள். அதற்கு உமர்(ரலி)அவர்கள், "அல்லாஹ்வின் தூதரே! குறைஷிகள் என்னைக் கொன்று விடுவார்கள் என்று அஞ்சுகின்றேன். (என்னுடைய) 'பனூ அதீ' குடும்பத்திலிருந்து என்னைக் காப்பாற்றுபவர் யாருமில்லை. நான் குறைஷிகள் மீது கொண்டிருக்கும் விரோதத்தையும் கடுமையையும் பனூ அதீ குடும்பம் நன்றாகத் தெரிந்து வைத்திருக்கின்றது. எனினும் நான் என்னைவிடக் கண்ணியமிக்க ஒருவரை உங்களுக்குக் காட்டுகிறேன். அவர்தான் உஸ்மான் பின் அஃப்பான்" என்று கூறினார்கள்.
உடனே நபி(ஸல்) அவர்கள், உஸ்மான்(ரலி)அவர்களை அழைத்து, தாம் போர் செய்வதற்காக வரவில்லை; கஃஅபாவின் கண்ணியத்தை மதித்தவனாக அதைச் சந்திக்கவே (உம்ரா செய்யவே) வந்திருக்கிறேன் என்று தெரிவித்து வருமாறு அவரைக் குறைஷிகளிடம் அனுப்பி வைத்தார்கள்.
உஸ்மான்(ரலி) புறப்பட்டு மக்கா வந்து சேர்ந்தார்கள். அவரை அபான் பின் ஸயீத் வந்து சந்திக்கிறார். உஸ்மான்(ரலி)அவர்களை வாகனத்திலிருந்து இறக்கி, தமது (வாகனத்தின்) முன்னால் அமர வைத்துக் கொண்டு, தான் பின்னால் இருந்து அபான் பின் ஸயீத் அடைக்கலம் கொடுக்கிறார்.
கடைசியாக உஸ்மான்(ரலி), நபி(ஸல்)அவர்கள் சொல்லியனுப்பிய செய்தியைச் சமர்ப்பிக்கிறார்கள். அதன் பிறகு அபூ சுப்யானிடமும், மற்ற குறைஷிகளின் பெரும் புள்ளிகளிடமும் சென்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் செய்தியைத் தெரிவிக்கின்றார்கள்.
அதற்கு குறைஷித் தலைவர்கள், "நீ தவாஃப் செய்ய வேண்டும் என்று விரும்பினால் தவாஃப் செய்து கொள்! (முஹம்மதின் விவகாரத்தை இங்கு பேசாதே!)" என்று சொல்லி விடுகின்றனர். அதற்கு உஸ்மான் (ரலி), "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தவாஃப் செய்யாத வரை நான் செய்ய மாட்டேன்" என்று பதிலளிக்கிறார்கள். உடனே அவர்கள் உஸ்மான்(ரலி)அவர்களை திரும்பி வரவிடாமல் தடுத்து வைக்கின்றார்கள். அப்போது உஸ்மான்(ரலி)படுகொலை செய்யப்பட்டதாக நபி(ஸல்)அவர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் தகவல் கிடைக்கின்றது.
அறிவிப்பவர்: மிஸ்வர் பின் மக்ரமா (ரலி); நூல்: அஹ்மத்
பைஅத்துர் ரிள்வான்:

இதைப்பற்றி அல்லாஹுத்தஆலா கூறும்போது, அதில் கலந்துக் கொண்ட நபித் தோழர்களை, தான் திருப்திப்பட்டுக் கொண்டதாக கூறிக்காட்டுகிறான்.
"அந்த
மரத்தினடியில் நம்பிக்கையாளர்கள் உம்மிடம் உறுதி மொழி செய்தபோது அவர்களை
அல்லாஹ் பொருந்திக் கொண்டான். அவர்களது உள்ளங்களில் இருந்தவற்றை அறிந்தான்.
அவர்களுக்கு நிம்மதியை அருளினான். அவர்களுக்குச் சமீபத்தில் இருக்கும்
வெற்றியையும் வழங்கினான்" (அல்குர்ஆன் 48:18)
அறிவிப்பாளர் யஸீத் பின் அபீ உபைத்(ரஹ்)அவர்கள் கூறுகிறார்கள்:
நான்,(இந்த
செய்தியை எனக்கு அறிவித்த சலமா பின் அக்வஃ(ரலி)அவர்களிடம்) "அபூ முஸ்லிமே!
அன்று (நபித் தோழர்களான) நீங்கள் எந்த விஷயத்திற்காக (நபி(ஸல்)அவர்களிடம்)
உறுதிமொழி அளித்தீர்கள்?" என்று கேட்டேன். அதற்கு அவர்கள், "மரணத்தைச்
சந்திக்கத் தயாராயிருப்பதாக நாங்கள் உறுதிமொழியளித்தோம்" என்று
பதிலளித்தார்கள்.
நூல்: புகாரி, முஸ்லிம்
மேலும்
இந்த உடன்படிக்கையை பாராட்டும் விதமாக, நபியவர்களிடம் தோழர்கள் செய்த
உடன்படிக்கையானது தன்னிடம் செய்த உடன்படிக்கையாகும் என்றும் எல்லாம் வல்ல
அல்லாஹ்தஆலா தனது திருமறையிலே குறிப்பிடுகின்றான்.
"உம்மிடத்தில்
உறுதி மொழி எடுத்தோர் அல்லாஹ்விடமே உறுதி மொழி எடுக்கின்றனர். அவர்களின்
கைகள் மீது அல்லாஹ்வின் கை உள்ளது. யாரேனும் முறித்தால் அவர் தனக்கெதிராகவே
முறிக்கிறார். யார் தம்மிடம் அல்லாஹ் எடுத்த உறுதி மொழியை
நிறைவேற்றுகிறாரோ அவருக்கு மகத்தான கூலியை அவன் வழங்குவான்." (அல்குர்ஆன்
48:10)
நபி(ஸல்)அவர்களும் தங்கள் உயிர்களை அர்ப்பணிக்கத் தயாரான தோழர்களை "பூமியில் சிறந்தவர்கள்' என்று பாராட்டுகிறார்கள்.
ஜாபிர்(ரலி)அவர்கள் கூறுகிறார்கள்:
நாங்கள்
ஹுதைபிய்யா தினத்தன்று ஆயிரத்து நானூறு பேர் இருந்தோம். அப்போது
நபி(ஸல்)அவர்கள் எங்களிடம், "பூமியிலிருப்பவர்களில் நீங்களே சிறந்தவர்கள்"'
என்று கூறினார்கள்.
நூல்: முஸ்லிம்
நூல்: முஸ்லிம்
"பைஅத்துர் ரிள்வான்' சத்தியப் பிரமாண நிகழ்ச்சியில் உஸ்மான் (ரலி) அவர்கள் கலந்து கொள்ளாததற்குக் காரணம், உஸ்மான் (ரலி) அவர்களை விடக் கண்ணியம் வாய்ந்த ஒருவர் (மக்கா பள்ளத்தாக்கில் இல்லை. அப்படி) இருந்திருந்தால் உஸ்மான் அவர்களுக்குப் பதிலாக அவரை நபி (ஸல்) அவர்கள் (குறைஷிகளிடம் பேச மக்காவிற்குத் தம் தூதுவராக) அனுப்பியிருப்பார்கள். (அப்படி ஒருவரும் இல்லை) எனவே தான், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உஸ்மானை அனுப்பினார்கள். மேலும், இந்த சத்தியப் பிரமாண நிகழ்ச்சி உஸ்மான் (ரலி) அவர்கள் மக்காவிற்குப் போன பின்பு தான் நடைபெற்றது. அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தம் வலக் கையைச் சுட்டிக் காட்டி, "இது உஸ்மானுடைய கை' என்று சொல்லி அதைத் தம் (இடக்) கையின் மீது தட்டினார்கள். பிறகு, " (இப்போது நான் செய்த) இந்த சத்தியப் பிரமாணம் உஸ்மானுக்காகச் செய்யப்படுவதாகும்' என்று சொன்னார்கள்.
அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி); நூல்: புகாரி
இவ்வாறு நடைப்பெற்ற இந்த சத்தியப் பிரமாண நிகழ்ச்சிக்கு பிறகு, நபி(ஸல்)அவர்கள் மக்காவை நோக்கி பயணத்தைத் தொடர்கிறார்கள்.
இவ்வாறு நடைப்பெற்ற "பைஅத்துர் ரிள்வான்" என்ற இந்த சத்தியப் பிரமாண நிகழ்ச்சிக்கு பிறகு, நபி(ஸல்)அவர்கள் மக்காவை நோக்கி பயணத்தைத் தொடர்கிறார்கள். இறைத் தூதரையும் அவர்களின் தோழரையும் ஏற்றுக் கொள்ளத் தயாரில்லாத மக்காவிலிருந்த நிராகரிப்பாளர்களுக்கு இருந்த ஒரே வழி யுத்தம் செய்வது மட்டுமே. எனவே, இடையிலேயே இறைத்தூதரையும் முஸ்லிம்களையும் தடுத்து நிறுத்திப் போராட மக்காவாசிகள் காலித் பின் வலீதின் கீழ் ஒரு படைப்பிரிவை அனுப்புகிறார்கள்.
மக்காவை
நோக்கி நபி(ஸல்)அவர்கள் புறப்பட்டு சென்றுக் கொண்டிருந்தபோது வழியில்
நபி(ஸல்)அவர்கள், "காலித் பின் வலீத், குறைஷிகளின் குதிரைப் படையுடன்
'கமீம்' என்ற இடத்தில் (போர் வியூகத்துடன்) முதல் அணியாக (நம்மை எதிர்
கொள்ளக்) காத்திருக்கின்றார். ஆகவே, வலப்பக்கப் பாதையில் செல்லுங்கள்,
(காலித் பின் வலீதுக்குத் தெரியாமல் மக்காவின் அருகே சென்று விடலாம்)"
என்று கூறினார்கள். அல்லாஹ்வின் மீது ஆணையாக! அவர்கள் வருவதை காலித்
அறியவில்லை. குறைஷி குதிரைப் படையினர் (முஸ்லிம்களுடைய) உம்ரா பயணக்
குழுப்படை எழுப்பிய புழுதியைக் கண்டவுடன் (அதன் தளபதியான) காலித் பின்
வலீத், குறைஷிகளை எச்சரிப்பதற்காக, குதிரையைக் காலால் உதைத்து விரட்டியவராக
(விரைந்து) சென்றார். நூல்: புகாரி
தொடர்ந்து
நபி(ஸல்)அவர்களும் அவர்களின் தோழர்களும் பயணித்துக் கொண்டிருக்கிறார்கள்.
மக்காவினுள் இறங்கும் வழியாக அமைந்துள்ள சிறிய மலை ஒன்றை அடைந்ததும்
('மிரார்' என்னுமிடத்தில்) அவர்களுடைய ஒட்டகம் மண்டியிட்டு அமர்ந்துக்
கொண்டது. மக்கள்(அதை எழுப்பி நடக்க வைப்பதற்காக) "ஹல் ஹல்" என்று
அதட்டினார்கள். அது எழும்ப மறுத்து முரண்டு பிடித்ததும் மக்கள், "கஸ்வா
பிடிவாதம் பிடிக்கிறது, கஸ்வா பிடிவாதம் பிடிக்கிறது'' என்று கூறினார்கள்.
("கஸ்வா" என்பது நபி(ஸல்)அவர்களின் ஒட்டகத்தின் பெயர்)
நபி (ஸல்) அவர்கள், "கஸ்வா பிடிவாதம் பிடிக்கவுமில்லை; பிடிவாதம் பிடிப்பது அதன் குணமுமில்லை. ஆனால், (யமன் நாட்டு மன்னன் அப்ரஹா தலைமையில் யானைப்படை கஃஅபாவை இடிக்க வந்தபோது) யானையைத் தடுத்த(இறை)வனே அதையும் தடுத்து வைத்திருக்கிறான்" என்று கூறினார்கள். நூல்:புகாரி
நபி (ஸல்) அவர்கள், "கஸ்வா பிடிவாதம் பிடிக்கவுமில்லை; பிடிவாதம் பிடிப்பது அதன் குணமுமில்லை. ஆனால், (யமன் நாட்டு மன்னன் அப்ரஹா தலைமையில் யானைப்படை கஃஅபாவை இடிக்க வந்தபோது) யானையைத் தடுத்த(இறை)வனே அதையும் தடுத்து வைத்திருக்கிறான்" என்று கூறினார்கள். நூல்:புகாரி
ஒட்டகம் நகர மறுத்து, படுத்துவிட்டதைக் கண்ட நபி(ஸல்)அவர்கள், அது இறைவனின் ஏற்பாடு என்று புரிந்துக் கொண்டு, சமாதானத்திற்கு முதலிடம் கொடுக்கும் வகையில் மக்காவோடு ஒரு உடன்பாட்டுக்கு வருவதற்காக மிகவும் கவனத்தோடு, நிதானமாகவும் பொறுமையாகவும் செயல்படுகிறார்கள்.
"என்
உயிரைத் தன் கையில் வைத்திருப்பவன் மீது சத்தியமாக! (போரைக் கைவிட்டு)
அல்லாஹ்வின் புனித(த் தல)ங்களை கண்ணியப்படுத்தும் ஒரு திட்டத்தை அவர்கள்
என்னிடம் கேட்டால் அதை நிச்சயம் அவர்களுக்கு நான் (வகுத்துக்)கொடுப்பேன்"
என்று கூறினார்கள். பிறகு நபி(ஸல்)அவர்கள் தம் ஒட்டகத்தைத் தட்டி
எழுப்பினார்கள். உடனே அது குதித்தெழுந்தது.
நூல்: புகாரி
![]() |
| ஹுதைபிய்யா பள்ளத்தாக்கு |
(முதலில்)
புதைல் பின் வரகா அல்குஸாயீ அவர்கள், தம் குஸாஆ குலத்தார் சிலருடன் வருகை
தந்தார்கள். அவர்கள் (மக்கா மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதியில் வசிக்கும்
மக்களான) திஹாமாவாசிகளிடையே நபி(ஸல்) அவர்களின் நலம் நாடும்
நம்பிக்கைக்குரியவர்களாக இருந்தனர். புதைல் அவர்கள், "(முஹம்மத் அவர்களே!)
கஅப் இப்னு லுஅய், மற்றும் ஆமிர் இப்னு லுஅய் ஆகியோர் ஹுதைபிய்யாவின்
வற்றாத ஜீவ சுனைகளின் அருகே முகாமிட்டிருக்க, அங்கே அவர்களை விட்டுவிட்டு
(தங்களிடம் செய்தி சொல்ல) வந்துள்ளேன். அவர்களுடன் தாய் ஒட்டகங்களும் தம்
குட்டிகளுடன் வந்துள்ளன. அவர்கள் உங்களுடன் போரிட்டு உங்களை இறையில்லமான
கஃஅபாவை (சந்திக்க விடாமல்) தடுக்கப் போகிறார்கள்" என்று கூறினார்கள்.
உடனே
நபி (ஸல்) அவர்கள், "நாங்கள் எவருடனும் போரிடுவதற்காக வரவில்லை. மாறாக,
நாங்கள் உம்ரா செய்வதற்காகதான் வந்திருக்கின்றோம். குறைஷிகள் அடிக்கடி
போரிட்டுக் களைத்துப் போயிருக்கிறார்கள். போரின் காரணத்தால் அவர்களுக்கு
நிறையவே இழப்பும் ஏற்பட்டிருக்கிறது. அவர்கள் விரும்பினால் அவர்களுக்கு ஒரு
காலகட்டம் குறிப்பிட்டு சமாதான ஒப்பந்தம் செய்துக் கொள்கிறேன். அவர்கள்
எனக்கும் மக்களுக்குமிடையே (இஸ்லாமியப் பிரச்சாரத்திற்குத்) தடையாக
இருக்கவேண்டாம். நான் வெற்றி பெற்றுவிட்டால், அவர்கள் விரும்பினால்
மக்களெல்லாம் விரும்பி ஏற்றுக் கொள்ளும் இந்த மார்க்கத்திலேயே இணைந்து
கொள்ளட்டும். இல்லையென்றால் (சில நாட்கள்) அவர்களுக்கு ஓய்வாவது
கிடைக்கும். அவர்கள் இதற்கு மறுத்துவிட்டால், என் உயிரைத் தன் கையில்
வைத்திருப்பவன் மீதாணையாக! நான் எனது இந்த விவகாரத்திற்காக என் தலை
துண்டாகி விடும் வரை அவர்களுடன் போரிடுவேன். அல்லாஹ், தன் திட்டத்தை
நடத்தியே தீருவான்" என்று கூறினார்கள்.
"நீங்கள்
சொல்வதை அவர்களுக்கு நான் எடுத்துரைப்பேன்" என்று கூறிவிட்டு புதைல் பின்
வரகா குறைஷிகளிடம் சென்று, "நாங்கள் இந்த மனிதரிடமிருந்து உங்களிடம்
வந்திருக்கிறோம். அவர் ஒரு விஷயத்தைக் கூறியதை நாங்கள் கேட்டோம். அதை
உங்களுக்கு எடுத்துச் சொல்ல வேண்டுமென்று நீங்கள் விரும்பினால் நாங்கள்
அவ்வாறே செய்கிறோம்" என்று சொன்னார்.
அப்போது
அவர்களிலிருந்த அறிவிலிகள், "அவரைக் குறித்து எங்களுக்கு எதையும் நீர்
தெரிவிக்க வேண்டிய அவசியமில்லை" என்று கூறினர். ஆனால், அவர்களில் கருத்துத்
தெளிவுடையவர்கள், "அவரிடமிருந்து நீங்கள் கேட்டதை எடுத்துச் சொல்லுங்கள்"
என்று கூறினர். பிறகு புதைல், "அவர் இப்படியெல்லாம் சொல்லக் கேட்டேன்"
என்று நபி(ஸல்)அவர்கள் சொன்னதை அவர்களுக்கு எடுத்துரைத்தார்.
உடனே,
(அப்போது இறை மறுப்பாளராயிருந்த) உர்வா இப்னு மஸ்ஊத் அஸ்ஸகஃபீ எழுந்து
நின்று, "என் சமுதாயத்தாரே! நீங்கள் என் தந்தையைப் போல் (என் மீது
இரக்கமுடையவர்கள்) அல்லவா?" என்று கேட்டார். அதற்கு அவர்கள், "ஆம்" என்று
பதிலளித்தனர். உர்வா, "நான் உங்கள் மகனைப் போல் (உங்கள் நலம் நாடுபவன்)
இல்லையா?" என்று கேட்டார். அதற்கு அவர்கள், "ஆம் (நீங்கள் எங்கள் நலம்
நாடுபவர் தாம்)" என்று பதிலளித்தனர். மேலும் அவர், "நீங்கள் என்னைச்
சந்தேகிக்கிறீர்களா?" என்று கேட்டார். அதற்கு அவர்கள், "இல்லை" என்று
பதிலளித்தனர்.
அப்போது
உர்வா, "உக்காழ் (சந்தை) வாசிகளிடம் உங்களுக்கு உதவும்படி கேட்டதும்
அவர்களால் உதவ முடியாத (நிலை ஏற்பட்ட)போது நான் என் வீட்டாரையும் என்
குழந்தையையும் எனக்குக் கட்டுப்பட்டவர்களையும் உங்களிடம் கொண்டு
வந்துவிட்டேன் என்பதும் உங்களுக்குத் தெரியாதா?" என்று கேட்டார். அதற்கு
அவர்கள், "ஆம் (தெரியும்)" என்று பதிலளித்தார்கள்.
அப்போது
அவர், "முஹம்மது, உங்கள் முன் நல்லதொரு திட்டத்தைச் சமர்ப்பித்துள்ளார்.
நீங்கள் (அதற்கு) ஒப்புக் கொள்ளுங்கள். அவரிடம் என்னைச் செல்ல விடுங்கள்"
என்று கூறினார். அதற்கு அவர்கள், "அவரிடம் (எங்கள் சார்பாகப் பேசச்)
செல்லுங்கள்" என்று கூறினர். அவரும் நபி (ஸல்) அவர்களிடம் சென்று பேசத்
தொடங்கினார்.
நபி(ஸல்)அவர்கள்
புதைலிடம் சொன்னதைப் போலவே சொன்னார்கள். அப்போது உர்வா, "முஹம்மதே! உங்கள்
சமுதாயத்தினரை முற்றிலுமாக அழித்து விடுவதை நீங்கள் உசிதமாகக்
கருதுகிறீர்களா? உங்களுக்கு முன்னால் அரபுகள் எவரேனும் தம் சமுதாயத்தாரை
வேரோடு அழித்தார் என்று நீங்கள் கேள்விப்பட்டதுண்டா? வேறு விதமான முடிவு
ஏற்பட்டாலும்... குறைஷிகள் வென்றுவிட்டாலும்...(அதனால் உங்கள் தோழர்கள்
அனைவரும் கொல்லப்பட்டு விடுவார்கள் அல்லவா?) நானோ, அல்லாஹ்வின் மீதாணையாக!
பல முகங்களை (உங்கள் தோழர்களிடம்) பார்க்கின்றேன்; மக்களில்
பலதரப்பட்டவர்களைப் பார்க்கிறேன்; உங்களை விட்டுவிட்டு விரண்டோடக்கூடிய
(கோழைத்தனமுடைய)வர்களாகவே (இவர்களை) நான் பார்க்கிறேன்" என்று கூறினார்.
(இதைக்
கேட்ட) அபூபக்ர் (ரலி) அவர்கள் அவரை அக்கால வழக்கப்படி ஏசிவிட்டு,
"நாங்கள் இறைத் தூதரை விட்டுவிட்டு ஓடிவிடுவோமா?" என்று (கோபத்துடன்)
கேட்டார்கள். அதற்கு உர்வா, "இவர் யார்?" என்று கேட்டார். மக்கள்
"அபூபக்ர்" என்று பதிலளித்தார்கள். அதற்கு உர்வா, "நீங்கள் முன்பு எனக்கு
உதவி செய்திருக்கிறீர்கள். அதற்கான நன்றிக் கடனை நான் உங்களுக்கு இன்னும்
தீர்க்கவில்லை. அந்த நன்றிக் கடன் மட்டுமில்லாவிட்டால் நான் உங்களுக்கு
(தகுந்த) பதில் கொடுத்திருப்பேன்" என்று கூறிவிட்டு, நபி (ஸல்) அவர்களிடம்
பேசத் தொடங்கினார். நபி(ஸல்)அவர்களுடன் பேசும்போதெல்லாம் அவர்களுடைய
தாடியைப் பிடித்தபடி இருந்தார்.
அப்போது
முகீரா பின் ஷுஅபா (ரலி) அவர்கள் (கையில்) வாளுடனும் தலையில் இரும்புத்
தொப்பியுடனும் நபி(ஸல்)அவர்களின் தலைப் பக்கமாக நின்று கொண்டிருந்தார்கள்.
ஆகவே உர்வா, நபி(ஸல்)அவர்களின் தாடியைப் பிடிக்க முனைந்தபோதெல்லாம்
முகீரா(ரலி)அவர்கள், அவரது கையை வாளுறையின் (இரும்பாலான) அடிமுனையால்
அடித்து, "உன் கையை அல்லாஹ்வின் தூதருடைய தாடியிலிருந்து அப்புறப்படுத்து"
என்று கூறிய வண்ணமிருந்தார்கள்.
அப்போது
உர்வா தனது தலையை உயர்த்தி, "இவர் யார்?" என்று கேட்க மக்கள், "இவர்
முகீரா பின் ஷுஅபா" என்று கூறினார்கள். உடனே உர்வா, "மோசடிக்காரரே! நீர்
மோசடி செய்த போது (உம்மை தண்டனையிலிருந்து பாதுகாத்திட) நான்
உழைக்கவில்லையா?" என்று கேட்டார்.
முகீரா
பின் ஷுஅபா (ரலி) அவர்கள் அறியாமைக் காலத்தில் (இஸ்லாத்தைத் தழுவும்
முன்பு) ஒரு குலத்தாருடன் (எகிப்து மன்னனைக் காண) பயணம் சென்றார்கள்.
அப்போது (அக்குலத்தார் வழியில் குடித்துவிட்டு மயங்கிக் கிடக்க,) அவர்களைக்
கொன்றுவிட்டு அவர்களுடைய பொருட்களை எடுத்துக் கொண்டார்கள். (அதற்காக பனூ
மாலிக் குலத்தார் முகீரா அவர்களைப் பழி வாங்க முனைந்தபோது அவரது தந்தையின்
சகோதரரான உர்வாதான், அவர்களை உயிரீட்டுத் தொகைக் கொடுத்து தண்டனையிலிருந்து
காப்பாற்றினார்) பிறகு முகீரா (அங்கிருந்து) வந்து இஸ்லாத்தை ஏற்றுக்
கொண்டார்.
அப்போது
நபி (ஸல்) அவர்கள், "நீ இஸ்லாத்தைத் தழுவியதை நான் ஏற்றுக் கொள்கிறேன்.
ஆனால், (நீ அபகரித்துக் கொண்டு வந்த) பொருட்கள் எனக்கு
அனுமதிக்கப்படவில்லை" என்று கூறியிருந்தார்கள்.
உர்வா
தன் தோழர்களிடம் சென்று, "என் சமுதாயத்தாரே! (ரோமாபுரி மன்னன்)
சீசரிடமும், (பாரசீக மன்னன்) கிஸ்ராவிடமும், (அபிசீனிய மன்னன்)
நஜாஷியிடமும் தூதுக் குழுவில் சென்றுள்ளேன். அல்லாஹ்வின் மீதாணையாக!
முஹம்மதின் தோழர்கள் முஹம்மதுக்கு அளிக்கின்ற கண்ணியத்தைப் போல் எந்த
அரசருக்கும் அவரது தோழர்கள் கண்ணியம் அளிப்பதை நான் பார்த்ததேயில்லை.
மேலும், அவர் உங்கள் முன் நேரிய திட்டம் ஒன்றைச் சமர்ப்பித்துள்ளார். ஆகவே,
அதை ஏற்றுக் கொள்ளுங்கள்" என்று கூறினார்.
உடனே
பனூகினானா குலத்தைச் சேர்ந்த ஒரு மனிதர், "என்னை அவரிடம் செல்லவிடுங்கள்"
என்று சொன்னார். அதற்கு அவர்கள், "சரி, செல்லுங்கள்" என்று கூறினர். அவர்
நபி (ஸல்)அவர்களிடமும் அவர்களின் தோழர்களிடமும் வந்தபோது அல்லாஹ்வின்
தூதர்(ஸல்)அவர்கள், "இது இன்னார், இவர் இறைவனுக்காக ஹஜ்ஜில் அறுக்கப்படும்
தியாக ஒட்டகங்களை கண்ணியப்படுத்துகின்ற ஒரு குலத்தைச் சேர்ந்தவர். ஆகவே,
இவரிடம் தியாகப் பலி ஒட்டகத்தை அனுப்பி வையுங்கள்" என்று சொன்னார்கள்.
உடனே, அவரிடம் ஒரு தியாக ஒட்டகம் ஒன்று அனுப்பி வைக்கப்பட்டது. மக்கள்
"தல்பியா" கூறியபடி அவரை வரவேற்றார்கள். இதை அவர் கண்டவுடன்,
"சுப்ஹானல்லாஹ்! இவர்களை இறையில்லத்திற்கு வரவிடாமல் தடுப்பது சரியில்லையே"
என்று (தமக்குள்) கூறிக்கொண்டார்.
(குறைஷிகளான)
தம் தோழர்களிடம் திரும்பிச் சென்றபோது, "தியாக ஒட்டகங்கங்களுக்கு (அடையாள)
மாலைக் கட்டித் தொங்கவிடப்பட்டு, அவற்றை அடையாளமிடப்பட்டிருப்பதை நான்
கண்டேன். ஆகவே, இறையில்லத்திற்கு வரவிடாமல் அவர்களைத் தடுப்பதை நான்
சரியானதாகக் கருதவில்லை" என்று கூறினார்.
அவர்களில்
மிக்ரஸ் பின் ஹஃப்ஸ் என்றழைக்கப்பட்ட ஒரு மனிதர் எழுந்து, "என்னை அவரிடம்
போக விடுங்கள்" என்று கூறினார். மக்காவாசிகள், "சரி, நீங்கள் அவரிடம்
போங்கள்" என்று கூறினர். முஸ்லிம்களிடம் அவர் சென்றபோது நபி(ஸல்)அவர்கள்,
"இவன் மிக்ரஸ் என்பவன். இவன் ஒரு கெட்ட மனிதன்" என்று கூறினார்கள். அவன்
(வந்தவுடன்) நபி(ஸல்)அவர்களிடம் பேச ஆரம்பித்தான்.
அவன்
பேசிக் கொண்டிருக்கையில், சுஹைல் இப்னு அம்ர் என்பவர் குறைஷிகளின்
தரப்பிலிருந்து வந்தார். சுஹைல் இப்னு அம்ர் வந்த போது நபி(ஸல்) அவர்கள்,
"உங்கள் விவகாரம் சுலபமாகி விட்டது" என்று ("சஹ்ல் = சுலபம்" என்னும்
பொருள் கொண்ட பெயருடைய ஒருவர் வந்ததைக் குறிக்கும் வகையில்) கூறினார்கள்.
சுஹைல் இப்னு அம்ர் வந்து, "(ஏட்டைக்) கொண்டு வாருங்கள். உங்களுக்கும்
எங்களுக்கும் இடையிலான (சமாதான ஒப்பந்தத்திற்கான) பத்திரம் ஒன்றை
எழுதுவோம்" என்று கூறினார்.
நூல்: புகாரி (2731)
நபி(ஸல்)அவர்களின்
சமாதான உடன்படிக்கைக்கான வேண்டுகோளை சுஹைல் இப்னு அம்ர் ஏற்றுக்கொண்டதும்,
அண்ணலவர்கள் உடன்படிக்கைகளை எழுத தயாராகிறார்கள். ஆனாலும் இருவர் தரப்பு
ஒப்புதலோடும் எழுதப்படவேண்டிய ஒப்பந்தத்தை, நிராகரிப்பாளர்கள் தங்களின்
இஷ்டப்படி எழுத நிபந்தனைகளை விதிக்கிறர்கள்.
அண்ணல் நபி(ஸல்)அவர்கள் அந்த ஒப்பந்தத்திற்காக முயற்சிக்கின்ற அந்த வேளை, 'மக்கா எந்த வகையிலும் முஸ்லிம்களை ஏற்கும் நிலையில் இல்லை' என்ற வகையில் இம்முயற்சியைக் குழப்பிவிடும் நோக்கம் கொண்டதாக நிராகரிப்பவர்களின் நடவடிக்கைகள் அமைகின்றன.
அண்ணல் நபி(ஸல்)அவர்கள் ஒப்பந்தத்திற்காக முயற்சிக்கின்ற அந்த வேளை, 'மக்கா எந்த வகையிலும் முஸ்லிம்களை ஏற்கும் நிலையில் இல்லை' என்ற வகையில் இம்முயற்சியைக் குழப்பிவிடும் நோக்கம் கொண்டதாக நிராகரிப்பவர்களின் நடவடிக்கைகள் அமைகின்றன. நபி(ஸல்)அவர்களோடு பேசுவதற்கு பொருத்தமற்றவர்களை அவர்களிடம் அனுப்பியவர்கள், இப்போது முஸ்லிம்களுக்கு வெளிப்படையாகவே பாதகமாகத் தோன்றக்கூடிய, அவர்களை ஆத்திரமூட்டக்கூடிய நிபந்தனைகளை உடன்படிக்கையில் எழுதச் சொல்கிறார்கள். ஆரம்பிக்கும்போதே தகராறுக்காக மறுத்துப் பேசுகிறார்கள் நிராகரிப்பளர்கள்.
நபி(ஸல்) அவர்கள் எழுத்தரை அழைத்தார்கள். பின்னர், "பேரருளாளனும் கருணையன்பு உடையோனுமான அல்லாஹ்வின் திருப்பெயரால்..." என்று (சமாதான ஒப்பந்தத்திற்கான ஆரம்ப வாசகத்தை)நபியவர்கள் சொன்னார்கள்.
சுஹைல், "ரஹ்மான்- கருணையன்புடையோன்" என்பது என்ன என்று எனக்குத் தெரியாது. ஆயினும், "இறைவா! உன் திருப் பெயரால்..." என்று நீங்கள் முன்பு எழுதிக் கொண்டிருந்ததைப் போல்தான் நான் எழுதுவேன்" என்றார்.
முஸ்லிம்கள், "அல்லாஹ்வின் மீதாணையாக! "பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் -அளவற்ற அருளாளனும் கருணையன்பு உடையோனுமான அல்லாஹ்வின் திருப்பெயரால்" என்றுதான் இதை எழுதுவோம்" என்று கூறினார்கள்.
நபி(ஸல்)அவர்கள், "பிஸ்மிக்க அல்லாஹும்ம - இறைவா! உன் திருப்பெயரால் என்றே எழுதுங்கள்" என்று சொன்னார்கள்.
பிறகு நபி(ஸல்)அவர்கள், "இது அல்லாஹ்வின் தூதர் முஹம்மது அவர்கள் செய்துக் கொண்ட சமாதான ஒப்பந்தம்" என்று (எழுதும்படி வாசகம்) சொன்னார்கள். உடனே சுஹைல், "அல்லாஹ்வின் மீதாணையாக! நீங்கள் அல்லாஹ்வின் தூதர்தாம் என்று நாங்கள் நம்பியிருந்தால் இறையில்லத்திற்கு வரவிடாமல் உங்களைத் தடுத்திருக்கவும் மாட்டோம்; உங்களுடன் போரிட்டிருக்கவும் மாட்டோம். மாறாக, 'முஹம்மத் பின் அப்தில்லாஹ் -அப்துல்லாஹ்வின் மகன் முஹம்மது' என்று எழுதுங்கள்" என்று கூறினார்.
அதற்கு நபி (ஸல்) அவர்கள், "அல்லாஹ்வின் மீதாணையாக! நான் பொய் சொல்வதாக நீங்கள் கருதினாலும் நிச்சயம் நான் அல்லாஹ்வின் தூதர்தான். (இருந்தாலும் உங்கள் விருப்பப்படி) 'முஹம்மத் பின் அப்தில்லாஹ் - அப்துல்லாஹ்வின் மகன் முஹம்மது' என்றே எழுதுங்கள்" என்று கூறினார்கள்.
அறிவிப்பாளர் இமாம் ஸுஹ்ரீ(ரஹ்) கூறினார்கள். நபி(ஸல்)அவர்கள், அவர்களுடன் விட்டுக்கொடுத்து ஒத்துப் போகவிட்டதற்குக் காரணம் அவர்கள், "அல்லாஹ்வினால் புனிதமாக அறிவிக்கப்பட்ட (மக்கா நகரத்)தை கண்ணியப்படுத்துகிற எந்த ஒரு திட்டத்தை அவர்கள் என்னிடம் கேட்டாலும் அதை அவர்களுக்கு நான் (வகுத்துக்)கொடுப்பேன்" என்று முன்பே சொல்லியிருந்ததை நிறைவேற்றுவதற்காகதான்.
நூல்: புகாரி (2731)
ஒப்பந்தத்தை அவர்கள் எழுதியபோது, "இது அல்லாஹ்வின் தூதரான முஹம்மத் அவர்கள் செய்த சமாதான ஒப்பந்தத்தின் நிபந்தனைகள்" என்று எழுதினார்கள். உடனே மக்காவாசிகள், "நாங்கள் இதை ஒப்புக் கொள்ள மாட்டோம்; நீங்கள் இறைத்தூதர்தாம் என்று நாங்கள் அறிந்திருப்போமாயின் உங்களை (மக்காவில் நுழையவிடாமல்) தடுத்திருக்க மாட்டோம். ஆயினும், நீங்கள் அப்துல்லாஹ்வின் மகன் முஹம்மது தான்" என்று கூறினார்கள். நபி(ஸல்)அவர்கள், "நான் அல்லாஹ்வின் தூதராவேன்; அப்துல்லாஹ்வின் மகன் முஹம்மது ஆவேன்" என்று பதிலளித்துவிட்டு, அலீ(ரலி) அவர்களை நோக்கி, 'இறைத்தூதர்' என்ற வார்த்தையை அழித்துவிடுங்கள்" என்று கூறினார்கள். அலீ(ரலி), "முடியாது. அல்லாஹ்வின் மீதாணையாக! நான் தங்கள் (அந்தஸ்தைக் குறிக்கும்) பெயரை ஒருபோதும் அழிக்கமாட்டேன்" என்று கூறிவிட்டார்கள்.
நூல்: புகாரி (2699)
பிறகு ஒவ்வொரு நிபந்தனையும் சொல்லப்படும்போது அதை நிராகரிப்பவர்கள் அதற்கு மறுப்புத் தெரிவிப்பதும் மாற்றமாக சொல்வதுமாக இருந்தனர்.
முதல் நிபந்தனை:
பிறகு சுஹைலுக்கு நபி (ஸல்) அவர்கள், "எங்களை (இந்த ஆண்டு) இறையில்லத்திற்குச் செல்லவிடாமலும் அதை நாங்கள் தவாஃப் செய்ய விடாமலும் தடுக்கக் கூடாது" என்று (வாசகம்) சொன்னார்கள். உடனே சுஹைல், "அல்லாஹ்வின் மீதாணையாக! (இதை ஏற்க)முடியாது. (இந்த ஆண்டே உம்ரா செய்ய நாங்கள் உங்களுக்கு அனுமதியளித்தால்) 'நாங்கள் உங்கள் நிர்பந்தத்திற்கு அடிபணிந்து விட்டோம்' என்று அரபுகள் பேசிக் கொள்வார்கள். ஆயினும், வருகிற ஆண்டில் நீங்கள் உம்ரா செய்து கொள்ளலாம்" என்று கூறி, அவ்வாறே எழுதினார்.
அதாவது, முஸ்லிம்கள் இவ்வருடம் மக்காவில் நுழையக்கூடாது. அடுத்த ஆண்டு தான் உம்ராவுக்கு வரவேண்டும்.
இரண்டாவது நிபந்தனை:
குறைஷியரில் எவரேனும் உத்தரவின்றி மதீனாவுக்கு வந்துவிட்டால் அவரைத் திருப்பி அனுப்பிவிட வேண்டும். அதற்கு மாறாக முஸ்லிம்களில் எவரேனும் குறைஷிகளிடத்தில் வந்துவிட்டால் அவர்கள் திருப்பி அனுப்பப்பட மாட்டார்கள்.
சுஹைல், "எங்களிடமிருந்து ஒருவர் உங்களிடம் வந்தால், அவர் உங்கள் மார்க்கத்தில் இருந்தாலும் சரி, அவரை எங்களிடம் நீங்கள் திருப்பியனுப்பிவிட வேண்டும்" என்று நிபந்தனையிட்டார். முஸ்லிம்கள், "சுப்ஹானல்லாஹ்! அவர் முஸ்லிமாக (எங்களிடம்)வந்திருக்க, அவரை எப்படி இணைவைப்பவர்களிடம் திருப்பியனுப்புவது?" என்று வியப்புடன் கேட்டார்கள்.
அவர்கள் இவ்வாறு ஒப்பந்தம் பேசிக் கொண்டிருக்கும் போது (குறைஷிகளின் தரப்பிலிருந்து ஒப்பந்தம் பேச வந்த) சுஹைல் இப்னு அம்ருடைய மகன் 'அபூ ஜந்தல்'(எனபவர் தம் கால்கள் பிணைக்கப்பட்டிருக்க) விலங்குகளுடன் தத்தித் தத்தி நடந்து வந்தார். அவர்கள் மக்காவின் கீழ்ப்பகுதியிலிருந்து தப்பி வந்து முஸ்லிம்களிடையே வந்து தஞ்சம் புகுந்தார்.
உடனே (அவரது தந்தையான) சுஹைல், "முஹம்மதே! (ஒப்பந்தப்படி) முதலாவதாக, இவரை எங்களிடம் ஒப்படைக்கும்படி உங்களிடம் கோருகிறேன்" என்றார். அதற்கு நபி(ஸல்)அவர்கள், "நாம் இன்னும் இந்த நிபந்தனையை எழுதி முடிக்கவில்லையே" என்று பதிலளித்தார்கள்.
அதற்கு சுஹைல், "அப்படியென்றால், அல்லாஹ்வின் மீதாணையாக! உங்களிடம் நான் எந்த அடிப்படையிலும் ஒரு போதும் சமாதானம் செய்து கொள்ள மாட்டேன்" என்று கூறினார். (அப்போது) நபி(ஸல்)அவர்கள், "அப்படியென்றால் இவரை மட்டுமாவது நான் திருப்பியனுப்பாமலிருக்க எனக்கு அனுமதி தாருங்கள்" என்று கூறினார்கள். அதற்கு சுஹைல், "நான் உங்களுக்கு அனுமதி தர மாட்டேன்" என்று கூறினார்.
அதற்கு நபி(ஸல்)அவர்கள், "இல்லை, இவரை மட்டுமாவது திருப்பியனுப்பாமல் நிறுத்திக்கொள்ள எனக்கு அனுமதியளியுங்கள்" என்று கூறினார்கள். அதற்கு சுஹைல், "நான் அனுமதியளிக்கப் போவதில்லை" என்று கூறினார்.
மிக்ரஸ் என்பவர், "நாம் அதற்கு உங்களுக்கு அனுமதியளித்து விட்டோம்" என்று கூறினார். அபூஜந்தல்(ரலி)அவர்கள், "முஸ்லிம்களே! நான் முஸ்லிமாக (உங்களிடம்)வந்திருக்க, என்னை இணை வைப்பவர்களிடம் திருப்பியனுப்புகிறீர்களா? நான் சந்தித்த துன்பங்களை நீங்கள் (சிந்தித்துப்) பார்க்க மாட்டீர்களா?" என்று கேட்டார். அவர் இறைவழியில் கடுமையாக வேதனை செய்யப்பட்டிருந்தார்.
அப்போது, (இணைவைப்பவர்களின் அநியாயங்களைக் கண்டு, தான் கொந்தளித்துப் போனதைப் பற்றிக் கூறும்போது) உமர்(ரலி)அவர்கள் கூறுகின்றார்கள்:
உடனே நான் அல்லாஹ்வின் தூதரிடம் சென்று, "நீங்கள் சத்தியமாக அல்லாஹ்வின் தூதர் இல்லையா?" என்று கேட்டேன். அதற்கு அவர்கள், "ஆம், அல்லாஹ்வின் தூதர்தான்" என்று பதிலளித்தார்கள். நான், "நாம் சத்திய மார்க்கத்திலும் நம் பகைவர்கள் அசத்திய மார்க்கத்திலும் இல்லையா?" என்று கேட்டேன். அதற்கும் நபி(ஸல்)அவர்கள், "ஆம்" என்று பதிலளித்தார்கள். நான், "அப்படியானால் (இந்த நிபந்தனைகளை ஏற்று) நம் மார்க்கத்திற்கு நாம் ஏன் இழிவைச் சேர்க்க வேண்டும்?" என்று கேட்டேன். அதற்கு அவர்கள், "நான் அல்லாஹ்வின் தூதராவேன். நான் அவனுக்கு மாறு செய்வதில்லை. அவனே எனக்கு உதவக் கூடியவன்" என்று பதிலளித்தார்கள். நான், 'விரைவில் நாம் இறையில்லம் கஃஅபாவைத் தவாஃப் செய்வோம்' என்று தாங்கள் எங்களுக்கு சொல்லி வந்திருக்கவில்லையா?" என்று கேட்டேன். அதற்கு அவர்கள், "ஆம். ஆனால், நாம் இந்த ஆண்டே கஃஅபாவுக்குச் செல்வோம் என்று நான் உங்களுக்குச் சொன்னேனா?" எனக் கேட்டார்கள். நான், "இல்லை" என்று பதிலளித்தேன். நபி(ஸல்)அவர்கள், "நீங்கள் நிச்சயம் கஃஅபாவுக்குச் சென்று அதை தவாஃப் செய்வீர்கள்" என்று கூறினார்கள்.
பிறகு நான் அபூபக்ர் (ரலி) அவர்களிடம் சென்று, "அபூபக்ரே, இவர்கள் உண்மையிலேயே அல்லாஹ்வின் தூதரல்லவா?" என்று கேட்டேன். அதற்கு அவர்கள், "ஆம்; அல்லாஹ்வின் தூதர் தான்" என்று கூறினார்கள். நான், "நாம் சத்திய மார்க்கத்திலும், நம் பகைவர்கள் அசத்திய மார்க்கத்திலும் இல்லையா?" என்று கேட்டேன். அதற்கு அவர்கள், "ஆம்" என்றார்கள். நான், "அப்படியென்றால் இதை ஒப்புக்கொண்டு நம் மார்க்கத்திற்கு நாம் ஏன் இழிவைச் சேர்க்க வேண்டும்?" என்று கேட்டேன். அதற்கு அவர்கள், "நண்பரே! அல்லாஹ்வின் தூதர், தம் இறைவனுக்கு மாறு செய்ய முடியாது. அவனே அவர்களுக்கு உதவக் கூடியவன். அவர்களுடைய சுவட்டையே நீங்கள் பின்பற்றுங்கள். அல்லாஹ்வின் மீதாணையாக! அவர்கள் சத்திய வழியில்தான் இருக்கிறார்கள்" என்று கூறினார்கள்.
நான், "அவர்கள் நம்மிடம், 'நாம் இறையில்லத்திற்குச் சென்று அதை தவாஃப் செய்வோம்' என்று சொல்லவில்லையா?" என்று கேட்டேன். அதற்கு அவர்கள், "ஆம்,(சொன்னார்கள்.) ஆனால், 'நீங்கள் இந்த ஆண்டே அங்கு செல்வீர்கள்' என்று உங்களிடம் சொன்னார்களா?" என்று கேட்டார்கள். நான், "இல்லை" என்று பதிலளித்தேன். அதற்கு அவர்கள், "நீங்கள் நிச்சயம் அங்கு சென்று இறையில்லத்தை தவாஃப் செய்யத் தான் போகிறீர்கள்" என்று கூறினார்கள்.
நூல்: புகாரி (2731)
மூன்றாவது நிபந்தனை:
இரு தரப்பினரும் தங்களின் மற்ற கோத்திரத்தாருடன் சமாதான உடன்படிக்கை செய்துக் கொள்ளலாம். அதாவது, குறைஷியரின் நண்பர்களை முஸ்லிம்கள் எதிர்ப்பது கூடாது. அவ்வாறே முஸ்லிம்களின் நண்பர்களையும் குறைஷியர் தாக்கக் கூடாது.
"முஹம்மதின் உடன்படிக்கையில் சேர்ந்துக்கொள்ள விரும்புவோர் சேர்ந்து கொள்ளலாம்; குறைஷிகளின் உடன்படிக்கையில் சேர்ந்து கொள்ள விரும்புபவர்கள் அவ்வாறு சேர்ந்து கொள்ளலாம்" என்ற நிபந்தனையை எழுதியவுடனே 'குஸாஆ' கிளையினர் நபி(ஸல்)அவர்களின் உடன்படிக்கையில் வந்து இணைந்துக் கொண்டனர். பனூபக்ர் கிளையினர் குறைஷிகளின் உடன்படிக்கையின் கீழ் இணைந்து கொண்டனர்.
அறிவிப்பவர்கள்: மிஸ்வர்(ரலி), மர்வான்(ரலி); நூல்: அஹ்மத் 18152
நான்காவது நிபந்தனை:
அடுத்த வருடம் உம்ராவுக்கு வரும்போது நிராயுதபாணிகளாக மக்காவுக்கு வந்து குறைஷிகள் விரும்புகின்ற வரை மட்டுமே, அதாவது மூன்று தினங்கள் மட்டும் தங்கியிருக்கலாம் என்பதும் நிபந்தனைகளில் ஒன்றாகும்.
"வரும் ஆண்டில், நான் (என் தோழர்களுடன்) உம்ரா செய்ய அனுமதிக்கப்பட வேண்டும்; வாள்களைத் தவிர வேறு ஆயுதங்களை நாங்கள் எடுத்து வர மாட்டோம்; குறைஷிகள் விரும்புகின்ற வரை மட்டுமே மக்காவில் தங்கியிருப்போம்' என்னும் நிபந்தனையின் பேரில் சமாதான ஒப்பந்தம் செய்து கொண்டார்கள்.
நூல்: புகாரி (2701)
ஐந்தாவது நிபந்தனை:
பத்தாண்டு காலத்திற்கு போர் நிறுத்தம்
மக்கள் அமைதியாக வாழ்வதற்காக (அடுத்த) பத்து ஆண்டுகளில் (இரு தரப்பினருக்கும் இடையில்) போர் இல்லை என்று உடன்படிக்கை ஏற்பட்டது.
அறிவிப்பவர்கள்: மிஸ்வர்(ரலி), மர்வான்(ரலி); நூல்: அபூதாவூத் (2385)
இந்த நிபந்தனைகளை உள்ளடக்கிய ஒப்பந்தம் நபித்தோழர்களின் மனங்களை மிகவும் பாதிக்கச்செய்தது. காரணம்,
* சங்கிலியில் பிணைக்கப்பட்டு, கொடூரமான சித்ரவதைகளுக்கு தினம் தினம் ஆளாகி வந்த முஸ்லிமான சகோதரர் அபூஜன்தல், தங்கள் கண் முன்னால் மக்கத்து நிராகரிப்பவர்களிடம் மீண்டும் ஒப்படைக்கப்பட்ட கொடுமை!
* ஒப்பந்தத்தின் நிபந்தனைகளில் நபி(ஸல்)அவர்கள் மிகவும் இறங்கிப்போன விதம்!
* குறைஷிகள் ஒவ்வொரு நிபந்தனையிலும் ஏறுக்கு மாறாக, முஸ்லிம்களுக்கு பாதகமாக அமையும் நிபந்தனைகளை விதித்தது!
இவை அத்தனைக்கும் அண்ணல் நபி(ஸல்)அவர்களின் சமாதான சொல்லுக்கு இணங்கி அவர்களுக்கு கட்டுப்படவேண்டும் என்பதற்காகவே, அந்த அநியாயமான நிபந்தனைகளுக்கு எதிராக தங்களின் எதிர்ப்பைத் தெரிவித்து குரல் கொடுக்க முடியாமல் போய்விட்டதே என்ற ஆதங்கம் நபித்தோழர்களை உறைய வைத்தது!
தொடரும்.... இன்ஷா அல்லாஹ்!




Post a Comment