இவ்வாண்டு இந்தியன் பிறீமியர் லீக் (ஐ.பி.எல்) தொடர் ஆரம்பிக்கும் போது,
நடப்புச் சம்பியன்களாக இருந்த மும்பை இந்தியன்ஸ், நட்சத்திர அணியாகக்
கருதப்பட்ட றோயல் சலஞ்சர்ஸ் பெங்களூர், புதிய அணியாக இருந்தாலும் பலமான
அணியாகக் கருதப்பட்ட றைசிங் பூனே சுப்பர்ஜையன்ட்ஸ் ஆகிய அணிகளே, அதிக
வாய்ப்புள்ள அணிகளாகக் கருதப்பட்டன. அதில், றோயல் சலஞ்சர்ஸ் பெங்க;ர் அணி,
இறுதிப் போட்டிக்குத் தகுதிபெற்றிருந்தது.மறுபுறத்தில், சிறிய அணியாகக் கருதப்பட்டது தான், சண்றைசர்ஸ் ஹைதராபாத் அணி. டேவிட் வோணர், யுவ்ராஜ் சிங் என சில நட்சத்திரங்கள் இருந்தாலும், நட்சத்திரப் பட்டாளம் என்று சொல்லுமளவுக்கு, அவ்வணியில் பெரிய நட்சத்திரங்கள் இருந்திருக்கவில்லை.
ஆகவே, பெங்களூர் அணியும் ஹைதராபாத் அணியும் இறுதிப் போட்டியில் மோதியமை, கோலியாத்துக்கும் டேவிட்டுக்கும் (தாவீது) இடையிலான போட்டியென்றே வர்ணிக்கப்பட்டது. டேவிட் அணியாகக் கருதப்பட்ட ஹைதராபாத் அணியின் தலைவராக, டேவிட் வோணரே இருந்தமை, அந்த ஒப்பீட்டுக்கு இன்னமும் சுவாரசியத்தை வழங்கியது. பெங்களூர் எம். சின்னசுவாமி மைதானத்தில், இரண்டாவதாகத் துடுப்பெடுத்தாடுவது இலகு என்ற போதிலும், டேவிட்களின் தலைவரான டேவிட் வோணர், முதலில் துடுப்பெடுத்தாடும் முடிவை எடுத்தபோது, புருவங்கள் உயர்த்தப்பட்டன. ஆனால், தலைவரின் 69 (38), பென் கட்டிங்கின் ஆட்டமிழக்காத 39 (15), யுவ்ராஜ் சிங்கின் 38 (23) ஓட்டங்களின் துணையோடு, 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 208 ஓட்டங்களைப் பெற்றபோது, டேவிட்கள் வென்றுவிடுவார்களோ என்ற எண்ணம் ஏற்பட்டது.
ஆனால், தாங்கள் எவ்வளவு பலசாலிகள் என்பதை கோலியாத்கள் வெளிப்படுத்தினர். 10.2 ஓவர்களில் 114 ஓட்டங்கள், எவ்வித விக்கெட் இழப்புமின்றிப் பகிரப்பட்டன. 76 (38) ஓட்டங்களுடன் கிறிஸ் கெயில் ஆட்டமிழந்தாலும், விராத் கோலி அதிரடியாக ஆடி, 12.4 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்பு 140 ஓட்டங்கள் என்ற நிலை காணப்பட்டது. ஆனால், இலகுவில் விட்டுவிட்டாத டேவிட்கள், தொடர்ச்சியாக விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். இறுதியில், 20 ஓவர்களின் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 200 ஓட்டங்களை மாத்திரம் பெற்ற கோலியாத்கள், தோல்வியடைந்து, டேவிட்களுக்கு வெற்றியை வழங்கினர். டேவிட்களில் புவனேஷ்வர் குமார், முஸ்தபிஸூர் ரஹ்மான், பென் கட்டிங் ஆகியோர், சிறப்பாகப் பந்துவீசியிருந்தனர். போட்டியின் நாயகனாக பென் கட்டிங் தெரிவாக, தொடரின் மிகவும் பெறுமதிமிக்க வீரராக, றோயல் சலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் தலைவர் விராத் கோலி தெரிவானார்.
தொடரில் அதிக ஓட்டங்களை விராத் கோலி பெற்றார். 16 இனிங்ஸ்களில் 4 சதங்கள், 7 அரைச்சதங்கள் உட்பட 81.08 என்ற சராசரியில் 973 ஓட்டங்களை அவர் குவித்திருந்தார். டேவிட் வோணர், 17 இனிங்ஸ்களில் 9 அரைச்சதங்கள் உள்ளடங்கலாக 848 ஓட்டங்களைக் குவிக்க, மூன்றாவது இடத்தில் ஏபி டி வில்லியர்ஸ் 16 இனிங்ஸ்களில் 52.84 என்ற சராசரியில் 687 ஓட்டங்களைப் பெற்றிருந்தார். அதிக விக்கெட்டுகளைக் கைப்பற்றியவராக, புவனேஷ்வர் குமார் காணப்பட்டார். 17 இனிங்ஸ்களில் அவர் 23 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். 13 இனிங்ஸ்களில் பெங்களூரின் யுஸ்வேந்த்ரா சஹால் 21 விக்கெட்டுகள், ஷேன் வொற்சன் 16 இனிங்ஸ்களில் 20 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். வெற்றியின் பின்னர் கருத்துத் தெரிவித்த டேவிட் வோணர், அணியின் அடைவை, 'அற்புதமான அணி அடைவு" என விளித்தார். அணியாக இணைந்து மேற்கொள்ளப்பட்ட முயற்சி எனத் தெரிவித்த அவர், பெங்களூர் அணிக்கெதிராக 200 ஓட்டங்களைப் பெற வேண்டியிருக்கும் என்பதை அறிந்திருந்ததாகவும், தாங்கள் சிறப்பாகத் துடுப்பெடுத்தாடி, பந்துவீசி, களத்தடுப்பில் ஈடுபட்டதாகவும் தெரிவித்தார்.

Post a Comment