Halloween Costume ideas 2015
https://www.facebook.com/kalasemnet/

NEWS | கண்கெட்ட பின்னர் சூரிய நமஸ்காரம் செய்யும் மு.கா.வின் முன்னாள் தவிசாளர்!

ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைமைக் காரியாலயமான ” தாருஸ்ஸலாம்” இன் காணிக் கட்டடம் மற்றும் கட்சியின் சொத்துக்களின் உரித்துடைமை தொடர்பில் கட்சித் தலைமைத்துவம் உரிய வகையில் பதில் வழங்கவில்லை என கட்சியின் முன்னாள் தவிசாளர் பஷீர் சேகுதாவூத் குறிப்பிட்டுள்ளார்.

அறிக்கை ஒன்றினூடாக அவர் இந்த விடயத்தைக் கூறியுள்ளார்.

தாருஸ்ஸலாமின் காணி, கட்டடம் மற்றும் கட்சியின் சொத்துக்களின் உரித்துடைமை தொடர்பில் கட்சித் தலைவர் பதில் வழங்க வேண்டும் என தெரிவித்து கடந்த ஜூன் மாதம் 3 ஆம் திகதி கட்சித் தலைவருக்கு தவிசாளரால் கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

எனினும், இந்தக் கடிதத்திற்கு உரிய பதில் வழங்கப்படாவிடின் அதனைப் பகிரங்கப்படுத்துவதாகக் கூறியதற்கமைய, அதனை ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ளதாக பஷீர் சேகுதாவூத் குறிப்பிட்டுள்ளார்.

2000 ஆண்டு செப்டம்பர் 16 ஆம் திகதி தலைவர் அஷ்ரஃப் மரணமடைந்ததன் மர்மம் இன்று வரை நீடிப்பது போன்றே அவரால் வழங்கப்பட்ட கட்சித் தலைமையகத்தின் உரிமை தொடர்பிலும் மர்மம் நீடிப்பதாக கட்சியின் தலைவருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பல கோடி ரூபா பெறுமதியான சொத்தின் உரிமை தொடர்பாக பலமுறை அறிய முற்பட்டும், முடியாது போனமையால் இந்தக் கடிதம் எழுதப்பட்டதாக ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தவிசாளர் கூறியுள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் கட்சியின் உயர்மட்ட உறுப்பினர்கள் சிலர் கடிதம் ஊடாக செயலாளர் நாயகத்திடம் வினவிய போதிலும், அவருக்கும் இந்த விடயம் தொடர்பில் எதுவும் தெரியதுள்ளதாகவும் பஷீர் சேகுதாவூத் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த 16 வருடங்களாக ரவூப் ஹக்கீம் கட்சியின் தலைவராக செயற்படுவதால் தலைமையகத்தின் உரிமை தொடர்பில் தெளிவான பதிலை அவரிடம் தாம் எதிர்பார்ப்பதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கட்சியின் சொத்துக்கள் தொடர்பில் தெளிவினைப் பெறும் பொருட்டு 12 வினாக்களையும் பஷீர் சேகுதாவூத் முன்வைத்துள்ளார்.
எனினும், தமது கடிதத்திற்கு இரண்டு வாரங்களுக்குள் பதில் வழங்க வேண்டும் எனவும் ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தவிசாளர் பஷீர் சேகுதாவூத் குறிப்பிட்டிருந்தார்.

வழங்கப்பட்ட கால அவகாசத்திற்குள் கட்சியின் நம்பிக்கை சொத்துக்கள் மற்றும் அந்த சொத்துக்கள் ஊடாக கட்சிக்கு கிடைக்கும் வருமானங்கள் தொடர்பில் தகவல்களை வழங்காவிடின், வேண்டுமென்றே அதனை கட்சித் தலைவர் மறைப்பதாகவும் இந்த விடயம் தொடர்பில் கரிசனையின்றி செயற்படுவது வெட்டவெளிச்சமாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விடயம் தொடர்பில் முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்களுக்கும் கட்டட நிதிக்கு பங்களிப்பு செய்தோருக்கும் கட்சி ஆதரவாளர்களுக்கும் அபிமானிகளுக்கும் பொதுமக்களுக்கும் வெளிப்படுத்தும் உரிமையும் கடமையும் தனக்கு இருப்பதாகவும் பஷீர் சேகுதாவூத் குறிப்பிட்டுள்ளார்.

நீதியான விசாரணைகள் தேவைப்பட்டால் மனிதப் புதைகுழியே தோண்டப்படுவதாகக் கூறியுள்ள பஷீர் சேகுதாவூத், நாற்றம் எடுத்தாலும் புதைகுழிக்குள் அனுப்பப்பட்டுள்ள கடந்தகால உண்மைகளைத் தோண்டியெடுத்து மக்கள் முன் சமர்ப்பிப்பது, கட்சியைத் தூய்மைப்படுத்தக் காணப்படும் வழிகளில் ஒன்று எனவும் கடந்த ஜுன் மாதம் பஷீர் சேகுதாவூத் அனுப்பியுள்ள கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Labels:

Post a Comment

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget