வெறுப்புப் பேச்சுக்களை
நிகழ்த்தி சமயங்களைத் தூற்றி முஸ்லிம்களையும் மற்றும் சிறுபான்மை மக்களையும் கொச்சைப்படுத்தி
நாட்டின் தேசிய ஐக்கியத்தைச் சீர்குலைத்து வரும் கடும்போக்குச் சக்திகளுக்கு எதிராக
தற்போது அமுலிலுள்ள சட்டங்களினூடாக நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் என தேசிய ஒருங்கிணைப்பு
நல்லிணக்க இராஜாங்க அமைச்சர் ஏ.எச்.எம்.பௌசி கோரிக்கை விடுத்தார்.
பாராளுமன்றத்தில்
வரவு-செலவுத்திட்ட உரை மீதான விவாதத்தில் பேசுகையிலே அவர் இக்கோரிக்கையை விடுத்தார்.
மேலும், பேசிய அவர் கூறியதாவது,
வெறுப்பு பேச்சுக்கள்
தொடர்பாக உடன் நடவடிக்கை எடுப்பது அவசியமாகும். ஏனைய சமூகங்களை அல்லது சமயத் தலைவர்களை
அவதுறுக்குள்ளாக்கிப் பேசுபவர் எச் சமயத்தவராக இருந்தாலும் அவர்களுக்கெதிராக நடவடிக்கை
எடுக்கவேண்டும். வெறுப்புப் பேச்சு பேசுவது கிறிமினல் குற்றமாகும். இவர்களுக்கெதிராகப்
பொலிஸார் உடன் நடவடிக்கை எடுக்கவேண்டும். வெறுப்புப் பேச்சுகளுக்கெதிராக நடவடிக்கை
எடுக்க தவறினால் எனது அமைச்சான தேசிய நல்லிணக்க ஒருங்கிணைப்பு அமைச்சின் பணிகள் பெருமளவில்
பாதிக்கப்படும்.
முஸ்லிம்கள் வரலாற்றுக்
காலம் முதல் நாட்டுக்கு விசுவாசமிக்கவர்களாகவே இருந்து வந்துள்ளார்கள். சிங்கள ஆட்சியாளர்
காலம் முதல் முஸ்லிம்கள் வெளிநாட்டு ஆட்சியாளர்களிடமிருந்து நாட்டை பாதுகாப்பதற்காக
சிங்கள மன்னர்களுக்கு ஆதரவாகவே இருந்து வந்துள்ளார்கள். எம்.சி.அப்துர் றஹ்மான்,
ஏ.டபிள்யு. அப்துர் றஹ்மான்,
சர்.முஹம்மத் மாகான் மாகார்,
என்.எச்.எம்.அப்துர் காதர்,
கலாநிதி ரி.பி.ஜாயா,
டாக்டர் எம்.சி.எம் கலீல்,
சர் ராசிக் பரீத்,
எச்.எஸ்.இஸ்மாயில்,
முதலியார் எம்.எஸ்.காரியப்பர்,
கலாநிதி பதியுதீன் மஹ்மூத்
போன்ற எமது சமூகத்திற்காக மூத்த தலைவர்களது நினைவு என் மனதுக்கு வருகிறது. எமது நாட்டின்
இறைமையப் பாதுகாப்பதற்காக பெரும்பான்மை மக்களுக்கு இவர்கள் பக்கபலமாக இருந்துள்ளார்கள்.
இந்த வரவு செலவுத்திட்டத்தை
நான் ‘‘சுப்பர் மூன் பட்ஜெட் எனக்
குறிப்பிட விரும்புகின்றேன். இந்த பட்ஜெட்டின் ஆலோசனைகள் எமது நாட்டின் பொருளாதாரத்தில்
புது யுகம் ஒன்றை உருவாக்கும். இந்த பட்ஜெட் சகல தரப்பினருக்கும் நிவாரணம் வழங்குவது
குறித்து தேசிய நல்லிணக்க இராஜாங்க அமைச்சர் என்ற வகையில் மகிழ்ச்சியடைகின்றேன்.
அரச ஊழியர்களுக்கு
பத்தாயிரம் ரூபாய் சம்பள அதிகரிப்பு வழங்குவது வரவேற்கத்தக்கது. கடந்த தேர்தலில் இது
அளிக்கப்பட்ட வாக்குறுதியாகும். நல்லாட்சி அரசு மக்கள் பிரச்சினைகளிலிருந்து ஓடி விடாது
பதிலாக மக்களது நாளாந்த தேவைகளை வழங்கி அவர்களைத் திருப்திப்படுத்துவதற்காக சகல நடவடிக்கைகளையும்
எடுக்கும்.
வரவு செலவுத்திட்டத்தை
தயாரிப்பதற்காக அனுபவம் வாய்ந்த தலைவர்களான ரொனிடி மெல் மற்றும் சந்திரிக்கா பண்டாரநாயக்க
குமாரதுங்கவின் ஆலோசனைகளையும் ஆசிர்வாதத்தை பெற்றுள்ளார். இந்த அரிதான செயற்பாடு நிதி
அமைச்சரின் ராஜதந்திரத் தன்மையையே காட்டுகின்றது. அவர் தொழிலாளர்கள், தொழிற்சங்கங்கள் மற்றும் பொது மக்களதும் கருத்துக்களைப்
பெற்றே இந்த பட்ஜெட்டினைத் தயாரித்துள்ளார்.
175,000 மாணவர்களுக்கும்,
25,000 ஆசிரியர்களுக்கும் மடி டப்களை
வழங்குவதற்கு 5,000 மில்லியன் ரூபாவை
ஒதுக்கியுள்ளார். தொலைத்தொடர்பு கட்டணம் ஒரு பாரமாக இருந்தாலும், இதன் மூலம் தேசத்துக்கு நவீன தொழிநுட்பத்தின் முன்னேற்றத்தைப்
பயன்படுத்தும் வாய்ப்பு கிடைக்கின்றது.
Post a Comment