வாக்குகளைப் பெறும் நோக்கில் சாய்ந்தமருது மக்களுக்கு போலியான வாக்குறுதிகளைக் கொடுத்து விட்டு இம்மக்களின் உணர்வுகளுடன் முஸ்லிம் காங்கிரஸ் விளையாடுவதாக உலமா கட்சியின் தலைவர் மௌலவி முபாறக் அப்துல் மஜீத் தெரிவித்தார்.
உள்ளுராட்சிசபை விடயமாக இப்பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள குழப்பகரமான நிலைமை தொடர்பில் ஊடகங்களுக்கு விளக்கமளிக்கும் ஊடக சந்திப்பு 2017-10-28 ஆம் திகதி உலமா கட்சியின் கல்முனை தலைமையக காரியாலயத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து வெளியிடும்போதே மௌலவி முபாறக் அப்துல் மஜீத் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
சாய்ந்தமருது மக்களுக்கான உள்ளுராட்சிசபையை வழங்க வேண்டும் என்று தங்களது கட்சி கடந்த 2010 ஆம் ஆண்டு முதல் வலியுறுத்தி வருவதாகவும் அப்போதே இப்போதிருக்கும் எல்லையின் படி சாய்ந்தமருதுக்குரிய பிரதேச சபையை மிக இலகுவாக பெற்றிருக்க முடியுமாக இருந்தும் காலத்துக்கு காலம் இந்த ஊர்களுக்கு வருகைதரும் அரசியல் பிரமுகர்களிடம் இந்த மக்களுக்கு உள்ளுராட்சிசபை தருகிறோம் என்று கூறுமாறு கூறி, மக்களை பிழையாக வழிநடத்தி, ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தனது வாக்கு வங்கியை நிரப்பிக்கொள்வதாகவும் அதனூடாக ஊர்கள் மோதிக்கொள்ளும் நிலையை உருவாக்கியுள்ளதாகவும் தெரிவித்தார்.
சாய்ந்தமருது உள்ளுராட்சி சபை விடயமாக அண்மையில் அமைச்சர் பைசர் முஸ்தபா வெளியிட்டுள்ள கருத்தானது இம்மக்களின் அபிலாஷைகளை நிறைவேற்றுமா என்ற கேள்வியை ஏற்படுத்தியுள்ளதாகவும் இவரது கருத்தை வைத்து நோக்கும்போது அடுத்த வருட ஆரம்பத்தில் இடம்பெறவுள்ள உள்ளுராட்சி சபை தேர்தலுக்கு முன்னர் கல்முனை மாநகரசபையில் கோரப்படும் பிரிப்புகள் இடம்பெறுமா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். இந்த நிலையில் இவ்வாறு சாய்ந்தமருது மக்களை ஏமாற்றிய முஸ்லிம் காங்கிரசை அம்மக்கள் எதிர் வரும் தேர்தலில் தோற்கடிக்க வேண்டும்.
இப்பிராந்திய மக்களின் அபிலாஷைகள் நிறைவேற வேண்டுமானால் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் என்ற மாயையில் இருந்து மீள்வதின் ஊடாகவே அடைந்துகொள்ள முடியும் என்றும் என்றும் தெரிவித்தார்.
வரவுள்ள புதிய அரசியலைப்பு, வடக்கு கிழக்கு இணைப்பு தொடர்பில் கருத்துத் தெரிவித்த மௌலவி முபாறக் அப்துல் மஜீத், கடந்தகாலங்களில் முஸ்லிம்களின் பிரதிநிதிகளாக பாராளுமன்றம் சென்றோர் தங்களது கைகளை உயர்த்தியது போன்று வடக்கு கிழக்கை இணைக்கும் சாசணத்துக்கும் அதை ஆராயாமல் இதற்கும் தங்களது கைகளை உயர்த்திவிடுவார்களோ என்ற சந்தேகம் தமக்கு இருப்பதாகவும் விசேடமாக முஸ்லிம்களின் அதிகபட்ச ஆதரவைப்பெற்றுள்ள ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தங்களது கைகளை உயர்த்திவிட்டு தவறுதலாக உயர்த்தி விட்டோம் என்று சொல்லப்போகிறார்கள் என்றும் தெரிவித்தார்.
வடகிழக்கு இணைப்பு தொடர்பில் முஸ்லிம்களை பிரதிநித்துவப்படுத்தும் சில கட்சிகள் இணைப்புக்கு எதிரான கருத்துக்களை தெரிவிக்கின்றபோதிலும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ்தாம் எதிர்க்கிறோம் என்பதை நேரடியாக சொல்லாமல் மௌனமாக இருப்பது மிகுந்த சந்தேகத்தை ஏற்படுத்துவதாகவும் தெரிவித்தார்.
Post a Comment