Halloween Costume ideas 2015
https://www.facebook.com/kalasemnet/

ரிசானாவின் குடும்பமும், முஸ்லீம் அமைச்சரின் "ரிட்டேன் செக்கும்". கண்ணீர் கதை (வீடியோ)

பெப்ரவரி 04, வெளிநாட்டுச் சக்திகளிடம் இருந்து இலங்கைத் தாய் சுதந்திரம் அடைந்த தினம். இதே தினத்தில் ரிஸானா நபீக்கை இலங்கைக்கு ஈந்த ரிஸானா நபீக்கின் தாய் அரசியல்வாதிகளின் வாக்குறுதிகளால் விலங்கிடப்பட்டிருந்ததை அங்கு சென்ற பின்னர் அறிய முடிந்தது.
இரண்டு சகோதரிகள், ஒரு சகோதரன், தாய், விறகு வெட்டிப் பிழைக்கும் தள்ளாத உடம்பு தகப்பன். இருக்கின்ற ஓட்டைக் குடிசை இவர்களைத் தாங்க முடியாத நிலையில் குடும்ப பாரத்தை ரிஸானா பொறுப்பெடுக்கிறாள். தனதும் தனது இரண்டு சகோதரிகளதும் எதிர்கால மாப்பிள்ளைகளுக்காக வீடு கட்டிக் கொடுக்க வேண்டிய சமூகக் கொடுமைக்காக வெளிநாடு  சென்று தனது  உயிரைக் கொடுக்கிறாள்.

“ரிஸானாவின் விடுதலைக்காக பலரும் முயற்சி செய்தார்கள். பல அரசியல்வாதிகளும் ரிஸானாவுக்காகவென்று பலமுறை சவூதி சென்று வந்தார்கள். நாங்களும் இரண்டு தடவை சவூதி சென்று சம்பந்தப்பட்டவர்களின் மன்னிப்புக்காக முயற்சி செய்தோம். 2007 ஜூலை 20 இல், லலித் கொத்தலாவல ரிஸானாவை சந்தித்து விட்டு வந்தபின் அவரை மீட்டுத் தருவதாகவும் அவரது தேவைப்படி வீடொன்று கட்டித் தருவதாகவும் சொன்னார். வீட்டை விட ரிஸானாதான் முக்கியம் என்று  சொன்னதன் பின்னர், அவர் ஒரு இலட்சம் ரூபா கொடுத்தார். அதனை வைத்து ஏற்கனவே இருந்த சில கடன்களை அடைத்தோம்” என்று கூறினார் ரிஸானாவின் தாய்.

ரிஸானா சிறையில் இருக்கின்ற காலங்களில் பல முஸ்லிம் அரசியல்வாதிகளுக் கும் சவூதிக்கு சுற்றுலா செல்லும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. “ரிஸானாவை சந்திக்க சவூதிக்குச் சென்றவர்களில் பெரும்பாலானவர்கள் இங்கிருக்கின்ற எங்களது வீட்டுப் பக்கமும் வந்ததில்லை” என ஏமாற்றத்துடன் சொல்கிறார் ரிஸானாட உம்மா. (ரிஸானா அடைமொழியுடன் அவர் இப்படித்தான் தற்போது அறியப்படுகிறார்.)

ரிஸானாவின் பரிதாப முடிவுக்குப் பின்னர் ஏராளமானவர்கள் ஓடிவந்து தாராளமாக உதவி செய்திருக்கிறார்கள். “ஓரிரு நாட்களுக்கு முன்பு கூட காத்தான்குடி, கல்முனைப் பகுதிகளில் இருந்து மக்கள் வந்தார்கள். ஒரு ஜமாஅத்தினரும் கூட வந்து விசாரித்து விட்டுச் சென்றார்கள். எமது மக்கள் கொண்டு வந்து குவித்த உதவிகளில்தான் நாங்கள் சீவனோபாயம் நடத்திக் கொண்டிருக்கிறோம்” அவரது கண்கள் உதவியவர்களுக்கு நன்றியைத் தெரிவித்துப் பணித்தன.

ரிஸானாவின் குடும்பத்துக்கு உதவி செய்ய ஓடிவந்தவர்களில் ரிஸானாவின் குடும்பத்துக்குச் செய்த உதவிகளுக்கு மேலதிகமாக ரிஸானாவின் பெயரில் பொதுப் பணிகளையும் செய்து விட்டுப் போயிருக்கிறார்கள். “ரிஸானாவுக்கு தண்டனை நிறைவேற்றப்பட்ட காலங்களில் கரடு முரடான ரிஸானாவின் வீட்டுக்கான பாதை வழியே வாகனங்கள் சாரி சாரியாக வந்து போய்க் கொண்டிருந்தன. இப்படி வந்தவர்களில் ஒரு ஹாஜியார் இந்தப் பாதைக்கு தார் போட்டு செப்பனிட்டுக் கொடுத்தார்” என்றார் மூதூர் ஸலாமா நிலையத்தின் தலைவர் அஷ்ஷெய்க் ஸூஹ்ரி.
ரிஸானாவின் வீட்டுக்குப் பக்கத்திலுள்ள பள்ளிவாசலும் கூட ரிஸானாவின் பெயரால் ஐந்து இலட்சம் ரூபா செலவில் டைல்ஸ் இட்டுக் கொடுக்கப்பட்டிருக்கிறது.

இராணுவத்தினரால் அந்தப் பிரதேசத்துக்கே இல்லாத வசதியான வீடு கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளது. அந்த வீட்டைக் கொடுத்து ரிஸானாவின் ஒரு தங்கையை கரைசேர்த்து விட்டிருக்கிறார்கள். அரசாங் கம் 10 இலட்சம் ரூபா கொடுத்திருக்கிறது. இந்தப் பணத்தில் அடுத்த சகோதரிக்காக வளவு வாங்கி வீட்டுக்கான அத்திவாரம் போட்டிருக்கிறார்கள். அவர் இப்பொழுது புத்தளத்திலே படித்துக் கொண்டிருக்கிறார். அவருக்கு மாதாந்தம் செலவாகும் 8,000 ரூபாவையும் நிறுவனமொன்று பொறுப்பெடுத்திருக்கிறது.

மகனுக்கு திருகோணமலையில் வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தில் அப்போதைய அமைச்சர் டிலான் பெரேரா தொழில் வாய்ப்புப் பெற்றுக் கொடுத்திருக்கிறார். இவர் திருமணம் முடித்துவிட்டால் தமது இருப்பிடம், சீவனோபாயம் எப்படி இருக்கப் போகிறது, அடுத்த மகளுக்கான வீட்டை எப்படிக் கட்டி முடிப்பது என்ற சமூகம் தலையில் கட்டிய பாரங்கள்தான் ரிஸானாவை பெற்றவர்களை தற்பொழுது அழுத்திக் கொண்டிருக்கிறது.

“சமுதாயமும் சிங்கள அரசியல்வாதி களும் இராணுவமும் உதவி செய்ததை மறக்க முடியாதது போலவே, முஸ்லிம் அரசியல்வாதிகள் ஏமாற்றியதையும் மறக்க முடியாது” ரிஸானட உம்மாவோட நடந்த உரையாடல் முழுக்க தொனித்த சோகமான யதார்த்தம் இது.

“அமைச்சர் ஹிஸ்புல்லா 10 இலட்சம் ரூபா சவூதியில் இருந்து கொண்டு வந்து எங்களிடம் தந்ததாகப் பேசப்பட்டது. அவர் எதுவும் எங்களுக்குத் தரவுமில்லை. நாங்கள் அவரைக் கண்டதுமில்லை, எங்களது வீட்டை அவர் கண்டதுமில்லை. இம்ரான் மஹ்ரூப் எம்.பி. ஐம்பது இலட்சம் தருவதாகவும், இரண்டு மகள்களுக்கும் டவுனுக்குள் வீடு கட்டித் தருவதாகவும் சொன்னார். அவரும் எதுவும் செய்யவில்லை. அமைச்சர் ரவூப் ஹக்கீம் அவர்கள் 200,000 பெறு மதியான செக் ஒன்றும், 350,000 பெறுமதியான செக் ஒன்றும் கொடுத்தார்கள். அதில் இரண்டு இலட்சம் ரூபாவை காசாக்கினோம். 
மூன்றரை இலட்சம் ரூபா செக் ரிடர்ன் ஆகி விட்டது. காசு கிடைக்கவில்லை. 

நஜீப் எம்.பி. வீடு கட்டுவதற்கு அடிக்கல் நாட்டி விட்டுச் சென்றார். அதன்பின் அவரைக் காணவேயில்லை” என்று இறந்த பின்னும் ரிஸானாவின் பெயரால் ஆயிரம் பொய்களைச் சொல்லி ஏமாற்றுகின்ற முஸ்லிம் அரசியல்வாதிகள் பற்றி அடுக்கிக் கொண்டு போனார் ரிஸானாவின் தாய்.

இதைப் பற்றி ரஞ்சன் ராமநாயக்கவிடம் முறைப்பட்டோம். அவர் வருத்தமடைந்ததோடு 25,000 பணமும் எங்களுக்குத் தந்து ஆறுதல் சொல்லி அனுப்பினார் என்று ரிஸானாவின் தாய் கூறியபோது, ஏன் எல்லாவற்றையும் ரஞ்சன் ராமநாயக்கவிடம் முறையிடுகிறீர்கள் என்று கேட்டோம். அவர்தான் எங்களுடன் அக்கறையுடன் கதைக்கிறார். அவருடன் எந்த நேரம் கோல் எடுத்துப் பேசினாலும் கதைப்பார். வீடு கட்டித் தந்த ஆமிக்காரர் அடிக்கடி வருவார். விசாரிப்பார். எங்களது அரசியல்வாதிகள் போனை தூக்குவதே இல்லை. சொல்லப்பட்ட எல்லா அரசியல்வாதிகளதும் தொலைபேசி இலக்கங்கள் என்னுடைய போனிலே இருக்கிறது. முடிந்தால் இந்த போனிலிருந்து இப்பொழுது கதைத்துப் பாருங்கள் என்று சவால் விடும் தோரணையில் தைரியமாகச் சொன்னார் ரிஸானாட உம்மா.

இறந்தாலும் ஆயிரம் பொய் சொல்லிப் பிழைக்கின்ற அரசியல்வாதிகளை ரிஸானா நபீக்கின் விவகாரம் தட்டி எழுப்ப முடிந்தால் ரிஸானா இறந்தாலும் ஆயிரம் பொன் தான்.

Post a Comment

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget