பிரான்ஸின் நைஸ் பிராந்தியத்தில் பொதுமக்கள் மீது ட்ரக் வண்டி மோதியதில் 77 பேர் வரை கொல்லப்பட்டுள்ளனர்.தாக்குதல் நடத்திய சாரதி சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதுடன் தாக்குதலின் பின்னணியில் பயங்கரவாதிகள் செயற்படக்கூடும் எனவும் அவதானம் வெளியிடப்பட்டுள்ளது.
பிரான்ஸ் நகரான நைஸின் கடற்கரைப்பிராந்தியத்தில் இந்த சம்பவம் பதிவாகியுள்ளது.
பஸ்டைல் கொண்டாட்டங்களில் ஈடுபட்டவர்கள் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மிக வேகமாக ட்ரக்கை செலுத்திய சாரதி மக்கள் கூட்டத்திற்குள் ட்ரக்கை செலுத்தி பொது மக்களை கொலை செய்துள்ளதாக சம்பவத்தை நேரில் கண்டவர்கள் தெரிவிக்கின்றனர்.
இன்று இடம்பெற்ற இந்த தாக்குதலில் 77 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன் 100 இற்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளதாக அந்த நாட்டு வைத்திய வட்டாரங்கரளை மேற்கோள்காட்டி ரொய்ட்டர்ஸ் செய்திச் சேவை செய்தி வெளியிட்டுள்ளது.
விபத்தை ஏற்படுத்திய சாரதியை நோக்கி துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி வாகன சாரதி கொல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
பயங்கரவாதிகளின் தாக்குதலாக இது அமையலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளதுடன் வாகனத்தின் சாரதி இதுவரை அடையாளம் காணப்படவில்லை.
பிரான்ஸின் மத்திய நகரங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதுடன் இத்தாலிய எல்லையும் மூடப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
தொடர்ச்சியான தாக்குதல் நடத்தப்படுவதற்கான அறிகுறிகள் ஏதும் புலப்படவில்லை என பிரான்ஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Post a Comment