சாய்ந்தமருது மாவட்ட வைத்தியசாலையின் அபிவிருத்தி தொடர்பாக விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் எச்.எம்.எம்.ஹரீஸ், கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.எம்.நசீர் தலைமையிலான சுகாதார திணைக்கள உயர் அதிகாரிகளுக்கும் வைத்தியசாலை அபிவிருத்தி சபையினருக்குமான கலந்துரையாடல் நேற்று (03) சனிக்கிழமை சாய்ந்தமருது வைத்தியசாலை கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
இக்கலந்துரையாடலின் போது வைத்தியசாலை அபிவிருத்தி சபையின் செயலாளர் றியாத் ஏ. மஜீத் பேசுகையில்,
வைத்தியசாலையில் மருத்துவ உபகரணங்கள் பற்றாக்குறை காரணமாக இங்கு சேவையை நாடிவரும் மக்களுக்கு உரிய சேவையை வழங்க முடியாமலுள்ளது. இதற்கான உரிய உபகரணங்களை பெற்றுத்தருவதன் மூலம் மக்களுக்கு சிறந்த சேவையினை வழங்க முடியும். எனவே இதற்கான நடவடிக்கையினை அமைச்சர்களும், சுகாதார திணைக்கள அதிகாரிகளும் மேற்கொள்ள வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
மக்களின் மருத்துவத் தேவை அதிகரித்து வருகின்ற காலப்பகுதியில் மக்கள் இன்று வைத்திய நிபுணர்களின் சேவைகளை இவ்வைத்தியசாலையின் மூலம் எதிர்பார்க்கின்றனர். இதனை கருத்திற்கொண்டு அபிவிருத்திச் சபை இவ்வைத்தியசாலையினை தள வைத்தியசாலையாக தரமுயர்த்த வேண்டும் என்ற நோக்கில் பல முயற்சிகளை மேற்கொண்டு கிழக்கு மாகாண சபையின் அமைச்சரவை வாரியத்தின் அனுமதியையும் பெற்றுள்ளது.
ஆனால் இன்றுவரை அந்த தரமுயர்த்தும் நடவடிக்கைகள் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதனை பிரதி அமைச்சர் ஹரீஸ் மற்றும் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் நசீர் ஆகியோர் கவனத்தில் எடுத்து சாய்ந்தமருது மக்களின் தேவையாகவுள்ள இவ்வைத்தியசாலை தரமுயர்த்தல் விடயத்தை துரிதப்படுத்துமாறு கோரிக்கையும் விடுத்தார்.
வைத்தியசாலையின் வெளிநோயாளர் பிரிவு கட்டிட விஸ்தரிப்புக்கு பிரதி அமைச்சர் ஹரீஸ் தேயட்ட கிருள அபிவிருத்தி திட்டத்தின் கீழ் முதற்கட்ட நிர்மாணப் பணிக்காக 30 லட்சம் ரூபாவினை ஒதுக்கியமைக்கும், இதன் இரண்டாம் கட்ட நிர்மாணப் பணிக்கு இவ்வருடம் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் நசீர் 37 லட்சம் ரூபாவினை ஒதுக்கியமைக்கும் ஊர் மக்கள் சார்பாக நன்றிகளைத் தெரிவித்துக் கொள்வதாகவும் செயலாளர் றியாத் ஏ.மஜீத் தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து வைத்தியசாலையின் அவசர தேவையாவுள்ள மருத்துவ உபகரணங்கள் அடங்கிய மகஜரினை வைத்தியசாலை அபிவிருத்தி சபையின் செயலாளர் றியாத் ஏ.மஜீத் பிரதி அமைச்சர் ஹரீஸ் மற்றும் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் நசீர் ஆகியோரிடம் கையளித்தார்.
வைத்தியசாலை தரமுயர்த்தல் சம்பந்தமான அம் மகஜரினை பிரதி அமைச்சர் ஹரீஸ், சாய்ந்தமருது ஜூம்ஆப் பள்ளிவாசல் தலைவர் வை.எம்.ஹனீபா ஆகியோர் இணைந்து கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் நசீரிடம் கையளித்தனர்.
இதன்போது கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் நசீர் கருத்து தெரிவிக்கையில்,
சாய்ந்தமருது வைத்தியசாலையின் மருத்துவ உபகரணத் தேவைகள் அனைத்தும் இவ்வருடத்திற்குள் பூர்த்தி செய்து தர நடவடிக்கை எடுத்துள்ளேன். அதற்கமைவாக விரைவில் உபகரணங்கள் வைத்தியசாலைக்கு கையளிக்கப்படும்.
மேலும் தரமுயர்த்தல் விடயமாக சம்பந்தமாக நானும், பிரதி அமைச்சர் ஹரீஸூம் இணைந்து மாகாண பிரதம செயலாளர், மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மத்திய சுகாதார அமைச்சின் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் மற்றும் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரட்ன ஆகியோருடன் கலந்துரையாடி தரமுயர்த்துவதற்கான அனுமதியினை பெற்றுத்தருவதற்கான நடவடிக்கையினை மேற்கொள்வோம் என உறுதியளித்தார்.
இக்கலந்துரையாடலில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஆரிப் சம்சுதீன், கல்முனை மாநகர சபை முன்னாள் பிரதி முதல்வர் ஏ.எல்.ஏ.மஜீத், சாய்ந்தமருது ஜூம்ஆப் பள்ளிவாசல் தலைவர் வை.எம்.ஹனீபா, செயலாளர் எம்.ஏ.மஜீத், கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஏ.எல்.அலாவுதீன், திட்டமிடல் பணிப்பாளர் டாக்டர் எம்.எஸ்.மர்சூக், சாய்ந்தமருது வைத்திய மாவட்ட வைத்திய அதிகாரி எம்.எம்.ஜெசீலுல் இலாஹி, வைத்தியசாலை அபிவிருத்தி சபையின் செயலாளர் றியாத் ஏ. மஜீத், அபிவிருத்தி சபையின் உப தலைவர்களான ஏ.ஆதம், எம்.எம்.உதுமாலெவ்வை உள்ளிட்ட அபிவிருத்திச் சபை உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.





Post a Comment