Halloween Costume ideas 2015
https://www.facebook.com/kalasemnet/

NEWS | சாய்ந்தமருதின் அபிவிருத்திகளை ஒருமுகப்படுத்த பொறியியலாளர் மன்றம்; சூரா சபை நடவடிக்கை!

-அஸ்லம் எஸ்.மௌலானா, இன்ஸாப்-
சாய்ந்தமருதின் எதிர்கால அபிவிருத்தி தொடர்பில் அப்பிரதேச பொறியியலாளர்களுடன் சாய்ந்தமருது ஷூரா சபை முக்கிய கலந்துரையாடல் ஒன்றை நடத்தியுள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமை (11) இரவு சாய்ந்தமருது பிரதேச செயலகத்தில் பிரதேச செயலாளர் அல்ஹாஜ் ஏ.எல்.எம்.சலீம் முன்னிலையில் ஷூரா சபையின் தலைவர் டாகடர் எம்.ஐ.எம்.ஜெமீல் தலைமையில் இக்கலந்துரையாடல் நடைபெற்றது.

இதன்போது சாய்ந்தமருதின் உட்கட்டமைப்பு, பொருளாதாரம், கல்வி, சுகாதாரம், வாழ்வொழுங்கு போன்ற பல்வேறு துறைகளின் அபிவிருத்தி வேலைகள் யாவும் முழுமையாகத் திட்டமிடப்பட்டு, தயாரிக்கப்பட வேண்டும் எனவும் இதற்காக பிரதேச பொறியியலாளர்களினதும் தென்கிழக்குப் பல்கலைக்கழக பொறியியல் பீடத்தினதும் தொழில்நுட்ப வழிகாட்டல், ஆலோசனைகள் மற்றும் உதவிகளை பெற்றுக் கொள்வது எனவும் தீர்மானிக்கப்பட்டது.

இதற்கான முதல் நடவடிக்கையாக சாய்ந்தமருது ஷூரா சபையுடன் இணைந்து செயற்படும் பொருட்டு, இப்பிரதேசத்தை சேர்ந்த பொறியியலாளகளை ஒன்றிணைத்து மன்றம் ஒன்றை உருவாக்குவது எனவும் அதற்கான ஒருங்கிணைப்பு பணிகளை பொறியியலாளர் எம்.ஐ.எம்.இல்ஹாம் ஜெஸீல் அவர்களின் வழிகாட்டலில் பொறியியலாளர் கமால் நிஷாத் மேற்கொள்வது எனவும் இணக்கம் காணப்பட்டது.
அத்துடன் விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ள தோணா புனரமைப்பு திட்டம் தொடர்பிலும் இக்கலந்துரையாடலில் விரிவாக ஆராயப்பட்டது.
2006ஆம் ஆண்டு ஜெய்கா நிறுவனத்தினால் 07 மில்லியன்
டொலர் செலவில் செயற்படுத்த வரையப்பட்ட தோணா அபிவிருத்தி திட்டத்தை முழுமையாகச் செயற்படுத்துவதற்கான எவ்வித ஏற்பாடும் இல்லாமல் துண்டு துண்டாகச் சில வேலைகளைச் செய்வதானது நிதியை வீண் விரயம் செய்யும் ஒரு நடவடிக்கையாகவே அமையும் என இதன்போது அதிருப்தியும் கவலையும் வெளியிடப்பட்டது.

எனவே எதிர்காலத்தில் முழுமையான தோணா அபிவிருத்தி தொடர்பாக துறைசார் நிபுணர்களும் அக்கறையுள்ள பொதுமக்களும் கலந்து கொள்ளும் கலந்துரையாடல்கள் நடாத்தப்பட்டு, திர்மானங்கள் எடுக்க சம்பந்தப்பட்ட அரசியல் தலைமைகளை வேண்டுவது என தீர்மானிக்கப்பட்டது.

அத்துடன் சாய்ந்தமருது கடற்கரைப் பூங்கா, ஆஸ்பத்திரி வீதிப் பாலம் போன்றவற்றின் அவல நிலை குறித்தும் பொலிவேரியன் கிராமத்தின் குறைபாடுகள், வடிகான்களில் நீர் தேங்கி நிற்றல்,போன்ற விடயங்களையும் அரசியல் தலைமைகளினதும் அதிகாரிகளினதும் கவனத்திற்கு கொண்டு செல்வது எனவும் தீர்மானிக்கப்பட்டதாக ஷூரா சபையின் செயலாளர் எஸ்.எம்.கலீல் தெரிவித்தார்.

Post a Comment

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget