-ஏ.எல்.ஏ. றபீக் பிர்தௌஸ்-
கிழக்கு
மாகாண சுகாதார அமைச்சின் கீழுள்ள வைத்தியசாலைகள், வைத்திய அதிகாரி
காரியாலயங்கள், கிராமிய மருத்துவ மத்திய நிலையங்கள் போன்றவற்றில் நீண்ட
காலமாக நிலவி வரும் ஆளணிப் பற்றாக் குறையை நிவர்த்தி செய்வதற்கான துரித
நடவடிக்ககைகள் மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.முஹம்மது நஸீரினால்
முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இது சம்பந்தமான இறுதித்
தீர்மானமெடுக்கும் உயரதிகாரிகளைக் கொண்ட கூட்டம் நேற்று பொத்துவில்
அறுகம்பை, 'ஹன்குலூஸ்' உல்லாச விடுதிக் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
கிழக்கு
மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.முஹம்மது நஸீர் தலைமையில் நடைபெற்ற
இக்கூட்டத்தில் மாகாண சுகாதார சேவைகள் பிரதிப்பணிப்பாளர் ஏ.லதாகரன்,
கல்முனை, அம்பாரை, மட்டக்களப்பு, திருகோணமலை போன்ற சுகாதார சேவைகள்
பணிமனைகளின் பணிப்பாளர்கள், வைத்திய அதிகாரிகள், திட்டமிடல் பணிப்பாளர்கள்,
கணக்காளர்கள், பிரதம கணக்காளர் போன்ற சுகாதார சேவை உயரதிகாரிகள் பலரும்
இதில் கலந்து கொண்டனர்.
மாகாண சுகாதார அமைச்சர்
ஏ.எல்.முஹம்மது நஸீர் இங்கு கருத்துத் தெரிவிக்கையில்:- ' பொத்துவில்,
சம்மாந்துறை, நிந்தவூர் போன்ற வைத்தியசாலைகளில் நிலவுகின்ற ஆளணிப்
பற்றாக்குறை உடன் தீர்க்கப்பட வேண்டுமென்பது உணரப்பட்டுள்ளது. ஆளணி
அதிகரிப்பில் இந்த மூன்று இடங்களுக்கும் முன்னுரிமை வழங்கப்பட வேண்டும்.
இதே போன்று அனைத்து இடங்களிலும் காணப்படும் ஆளணிப்பற்றாக்குறை நிவர்த்தி
செய்யப்படும். இதற்கு எமது அதிகாரிகள் எனக்கு ஒத்துழைப்பு நல்க வேண்டும்.
மேலதிகாரிகளின் கட்டளைகளை கீழே உள்ளவர்கள் அமூல்படுத்த வேண்டும். மாகாணப்
பணிப்பாளரின் இடமாற்ற உத்தரவை கீழுள்ள பிராந்தியப் பணிப்பாளர்கள், வைத்திய
அத்தியட்சகர்கள், வைத்திய அதிகாரிகள் போன்றோர் உடன் செயற்படுத்த வேண்டும்.
எனக்கு ஆளில்லை. ஆள் தந்தால்தான் நான் விடுவிப்பேன் போன்ற பிரச்சினைகளை
ஏற்படுத்தக் கூடாது. கட்டளைகளை இடுகின்ற உயரதிகாரிகள் உங்களது தேவைகளையும்
நிறைவேற்றுவார்கள். அதிகாரிகளின் உத்தரவுகளை முறைப்படி செயற்படுத்துகின்ற
போது வீணான பிரச்சினைகள் ஏற்படமாட்டாது' எனத் தெரிவித்தார்.

Post a Comment