
சாம்பியன்ஸ் டிராபி கோப்பையை கைப்பற்றுவதற்கான இறுதிப் போட்டியில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்தியது. நாணயசுழற்சியில் வென்ற இந்திய அணித்தலைவர் விராட் கோஹ்லி களத்தடுப்பை தெரிவு செய்தார்.
அதன்படி பாகிஸ்தான் அணியின் பகர் சமான், அசார் அலி ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். பகர் சமான் 3 ஓட்டங்கள் எடுத்திருந்த நிலையில் பும்ப்ரா பந்தில் டோனியிடம் கேட்ச் கொடுத்து ஆட்டம் இழந்தார். ஆனால், பும்ப்ரா க்ரீஸிற்கு வெளியில் கால்வைத்து பந்து வீசியதால் நோ-பால் ஆனது. இதனால் பகர் சமான் 3 ஓட்டங்களில் அவுட்டாவதில் இருந்து தப்பினார்.

அதன்பின் இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். இந்தியாவின் பந்து வீச்சு எந்த வகையிலும் அச்சுறுத்தும் வகையில் இல்லை. இதனால் இருவரும் அரைசதம் நோக்கி முன்னேறினார்கள். 20-வது ஓவரில் இருவரும் அரைசதம் அடித்தனர். அசார் அலி 61 பந்தில் அரைசதமும், பகர் சமான் 60 பந்தில் அரைசதமும் அடித்தனர்.
அணியின் ஸ்கோர் 128 ஓட்டங்களாக இருக்கும்போது அசார் அலி 59 ஓட்டங்கள் எடுத்த நிலையில் ரன்அவுட் ஆனார். அடுத்து பகர் சமான் உடன் பாபர் ஆசம் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடியும் சிறப்பாக விளையாடியது. பகர் சமான் சிறப்பாக விளையாடி சதம் அடித்தார். தொடர்ந்து விளையாடிய அவர் 106 பந்தில் 114 ஓட்டங்கள் எடுத்து ஹர்திக் பாண்டியா பந்தில் ஆட்டம் இழந்தார்.
பாபர் ஆசம் 46 ஓட்டங்கள் சேர்த்தார். சோயிப் மாலிக் 12 ஓட்டங்களில் ஆட்டம் இழந்தார்.

5-வது விக்கெட்டுக்கு மொகமது ஹபீஸ் உடன் இமாத் வாசிம் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அதிரடியாக விளையாடியது. 45-வது ஓவரை கேதர் ஜாதவ் வீசினார். இந்த ஓவரில் இரண்டு சிக்ஸ் உடன் 16 ஓட்டங்கள் சேர்த்தனர். 46-வது ஓவரை புவனேஸ்வர் குமார் வீசினார். இந்த ஓவரில் ஒரு சிக்ஸ் உடன் 11 ஓட்டங்கள் எடுத்தனர்.
47-வது ஓவரை பும்ப்ரா வீசினார். இந்த ஓவரில் ஒரு பவுண்டரியுடன் 8 ஓட்டங்கள் அடித்தனர். 48-வது ஓவரை புவனேஸ்வர் குமார் வீசினார். இந்த ஓவரில் 5 ஓட்டங்கள் மட்டுமே விட்டுக்கொடுத்தார். 49-வது ஓவரை பும்ப்ரா வீசினார். இந்த ஓவரில் இரண்டு நோ-பால் உடன் 11 ஓட்டங்கள் விட்டுக்கொடுத்தார். ஹபீஸ் 5-வது பந்தில் ஒரு ஓட்டங்கள் எடுத்து அரைசதம் அடித்தார். ஹபீஸ் 34 பந்தில் 4 பவுண்டரி, 2 சிக்சருடன் அரைசதம் அடித்தார்.

50-வது ஓவரை புவனேஸ்வர் குமார் வீசினார். இந்த ஓவரில் ஒரு சிக்ஸ் உடன் பாகிஸ்தான் 9 ஓட்டங்கள் எடுக்க 50 ஓவர்கள் முடிவில் நான்கு விக்கெட்டுக்கள் இழப்பிற்கு 338 ஓட்டங்கள் எடுத்தது. ஹபீஸ் 37 பந்தில் 57 ஓட்டங்கள் எடுத்தும், இமாத் வாசிம் 21 பந்தில் 25 ரன்கள் எடுத்தும் கடைசி வரை களத்தில் இருந்தனர்.
இதனையடுத்து இமாலய இலக்கை துரத்திய இந்திய அணிக்கு துவக்க வீரர் ரோகித் ‘டக்’ அவுட்டாகி, அதிர்ச்சி அளித்தார். மற்றொரு துவக்க வீரர் தவான் (21) நீண்ட நேரம் தாக்குபிடிக்கவில்லை. தொடர்ந்து வந்த கோஹ்லி (5) சொதப்பலாக வெளியேறினார்.

தொடர்ந்து வந்த யுவராஜ் (22), டோனி (4) கேதர் ஜாதவ் (9) என ஒருவரும் தாக்குபிடிக்கவில்லை. ஒரு முனையில் விக்கெட் சரிந்தாலும், மறுமுனையில் மனம் தளராமல் விளையாடிய பாண்டியா, ஐசிசி., தொடரின் பைனலில், அதிவேக அரைசதம் அடித்து அசத்தினார்.
பின் வரிசை வீரர்கள் சொதப்ப, இந்திய அணி, ஓவரில் 158 ஓட்டங்களுக்கு ஆல் அவுட்டாகி, 180 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது. பாகிஸ்தான் சார்பில் அதிகபட்சமாக, முகமது அமீர் 3 விக்கெட் சாய்த்தார்.
இதன் மூலம் சாம்பியன்ஸ் டிராபி அரங்கில், பாகிஸ்தான் அணி, தனது பரம எதிரியான இந்திய அணியை, லீக் போட்டியின் தோல்விக்கு பழிதீர்த்து முதல் முறையாக சாம்பியன் பட்டம் வென்றது.








Post a Comment