உங்கள் அனைவருக்கும் மும்மணிகளின் ஆசிகள்,
இறைவன் துணை,
கடந்த சில தினங்களாக நாட்டின் சில பிரதேசங்களில் இடம்பெற்ற இனங்களுக்கிடையில் வேற்றுமையையும் மோதல்களையும் ஏற்படுத்தும், ஒற்றுமையை சீர்குலைக்கும் மிகவும் கவலைக்குரிய சம்பவங்கள் காரணமாக நாட்டில் ஏற்பட்டிருக்கும் பதற்ற நிலையினைக் கவனத்தில் கொண்டே இன்று நான் இந்த விசேட அறிக்கையினை வெளியிடுகிறேன்.
வரலாற்றுக் காலம்தொட்டே நாம் நமது நாட்டின் உள்நாட்டு மோதல்கள் பற்றியும் பிற ஆக்கிரமிப்புக்கள் பற்றியும் நீண்ட அனுபவத்தை கொண்டிருக்கும் ஒரு இனமாவோம். குறிப்பாக கடந்த பல தசாப்தங்களாக நமது நாட்டில் சிங்கள, தமிழ், முஸ்லிம், மலே, பேகர் ஆகிய அனைத்து இனங்களும் சமாதானத்துடனும் ஒற்றுமையுடனும் அமைதியாக வாழ்ந்து வந்தார்கள். 1940களை நோக்கி செல்வோமாயின் பிரித்தானிய ஆட்சியிலிருந்த நமது நாட்டுக்கு விடுதலையைப் பெற்றுக்கொள்வதற்காக சிங்கள, தமிழ், முஸ்லிம் ஆகிய அனைத்து இனத்தவர்களும் சகோதரத்துவத்துடன் ஒன்றுபட்டு போராடி தேசிய சுதந்திரத்தை பெற்றுக் கொண்டோம். இருப்பினும் பிற்காலத்தில் ஏற்பட்ட இனங்களுக்கிடையிலான மோதல் நிலை எம்மை நீண்டகால யுத்தத்தைநோக்கி இட்டுச் சென்றது மட்டுமல்லாது, அதன் விளைவாக பாரிய அவலங்களுக்கு முகங்கொடுக்க நேர்ந்ததுடன், நாம் மனம் வருந்தத்தக்க நிலைக்கும் தள்ளப்பட்டோம்.
இருப்பினும் கடந்த மூன்று ஆண்டுகளாக நாம் இந்த நாட்டின் தேசிய ஒற்றுமை, நல்லிணக்கம் ஆகியவற்றை ஏற்படுத்துவதற்காக அர்ப்பணிப்புடன் செயற்படும் அரசு என்பதை நீங்கள் அனைவரும் அறிவீர்கள். இப்பின்னணியில் கடந்த சில தினங்களாக அம்பாறை, கண்டி ஆகிய பிரதேசங்களில் இடம்பெற்ற சம்பவங்கள் உயிர்ச் சேதங்களையும் பொருட் சேதங்களையும் ஏற்படுத்தியிருப்பதுடன் அப்பிரதேசங்களில் ஏற்பட்ட பதற்ற நிலை காரணமாக, நாட்டில், குறிப்பாக மக்களின் இயல்பு நிலை பாதிக்கப்படுகின்ற ஒரு சூழல் உருவாகியிருக்கின்றது.
இந்த சம்பவங்கள் காரணமாக உயிரிழப்புக்களுக்கும் பொருள் இழப்புக்களுக்கும் முகம்கொடுத்த அனைத்துக் குடும்பங்களுக்கும் அவர்களது உறவுகளுக்கும்; எனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்வதுடன், மேற்கொள்ளப்பட்ட அனைத்து வன்முறைச் சம்பவங்களையும் இச்சந்தர்ப்பத்தில் நான் மிக வன்மையாகக் கண்டிக்கின்றேன். அந்த அசம்பாவிதங்களை கண்டிக்கின்ற அதேவேளை அச்செயல்களில் ஈடுபட்ட தனி மனிதர்கள், அமைப்புக்கள், குழுக்கள் ஆகிய அனைத்து தரப்புக்களுக்கும் எதிராக சட்டத்தினை மிக நேர்த்தியாக செயற்படுத்த வேண்டுமென நான் பொலிஸ் துறைக்கு ஆலோசனை வழங்கியிருக்கிறேன்.

Post a Comment